யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் கூட்டுப்பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் என்பவரை வழக்கில் இருந்து தப்பிக்க வைத்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால் தேடப்பட்டு வரும் யாழ்.பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய எஸ்.சிறிகஜனுக்கு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளது.
குறித்த நபர் தப்பிச் செல்வதற்கு உடந்தையாக செயற்பட்ட மற்றுமொரு பொலிஸ் அதிகாரியான உப பொலிஸ் பரிசோதகர் எஸ்.சிறிகஜனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்ய முயற்சித்த போதும் அவரை கைது செய்ய முடியவில்லை எனவும் அவர் தலைமறைவாக உள்ளதாகவும் குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணை அதிகாரி ஐ.பி.நிஷாந்த சில்வா ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையொன்றை நேற்றைய தினம் சமர்ப்பித்துள்ளார்.
மேலும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர் நாட்டை விட்டு வெளியேறாத வகையில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினூடாக தடையொன்றை பிறப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றை கோரியிருந்தார். இவர்களது கோரிக்கையை பரிசீலித்த மன்றானது குறித்த உப பொலிஸ் பரிசோதகரான எஸ்.சிறிகஜன் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக்கூடாது என குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டு கட்டளை பிறப்பித்துள்ளது.
இதேவேளை, இம் மாணவியின் படு கொலை வழக்கானது யாழ்.மேல் நீதிமன் றில் ட்ரயல் அட்பார் நீதிமன்றில் இடம்பெற் றுவரும் நிலையில் இவ் வழக்கின் பிரதான சந்தேகபராக இருந்த சுவிஸ்குமார் என்பவர் கடந்த 2015.05.18 அன்று யாழ்.பொலிஸ் நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த நபரை வழக்கில் இருந்து தப்ப வைக்கும் வகையில் விடுதலை செய்யப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார்.
இதன்பின்னர் சுவிஸ்குமார் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் விடுதியொன்றில் தலைமறைவாகியிருந்த நிலையில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின்னர் இப் படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபராக இணைக்கப்பட்டார். இந்நிலையில் குறித்த நபரான சுவிஸ்குமாரை காப்பாற்றும் வகையில் அவரை விடுதலை செய்து அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றச்சசாட்டில் முன்னாள் வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித்ஜயசிங்க கடந்த சனிக்கிழமை குற்றப் புலனாய்வு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்றுறை நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
Post a Comment