ஆர்த்தி - ஜூலி ரீ-என்ட்ரி : 'பிக் பாஸ்' - மக்கள் மீது கமல்ஹாசன் கோபம் !!
'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் துளி கூட சுவாரசியமில்லாமல் கடந்து போனது. வழக்கம் போல சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் கமல்ஹாசன்தான் எதையாவது செய்து காப்பாற்ற வேண்டும் என்று ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள். அதை சனிக் கிழமை கமல்ஹாசன் சரியாகச் செய்யவில்லை என்றாலும், ஞாயிற்றுக் கிழமை ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு டாஸ்க்கில் ஏற்பட்ட பிரச்சனையில் சினேகனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, காயத்ரி, ரைசாவிடம் வந்து சினேகனிடம் மன்னிப்பு கேட்கவில்லை, அவர் வழக்கம் போல சீன் போட்டுக் கொண்டிருந்தார் என ஆரவ் நடந்து கொண்டார். ஆனால், இந்த விவகாரத்தை பிக் பாஸ் தவறுதலாகக் காட்டியுள்ளார் என ஆரவ் நேற்று கோபப்பட்டார். அதன் பின் ஆரவ்வின் தவறை சுட்டிக் காட்ட, ஆரவ், சினேகனிடம் மன்னிப்பு கேட்டதையும், காயத்ரி, ரைசாவிடம் சினேகன் பற்றி புறம் பேசியதையும் கமல்ஹாசன் குறும்படம் மூலம் போட்டுக் காட்டினார். வேறு வழியில்லாமல் தவறை ஏற்றுக் கொண்டு சினேகனிடம் மன்னிப்பு கேட்டார் ஆரவ்.
நேற்று, நிகழ்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் அழைத்து கமல்ஹாசன் உரையாடினார். அதில் ஆர்த்தி, ஜுலி, பரணி, சக்தி, காயத்ரி ஆகியோர் கலந்து கொண்டனர். அனைவரிடமும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு எப்படி இருக்கிறீர்கள் என அவர்களுடைய அனுபவத்தைக் கேட்டார். அப்போது பேசிய ஜுலி, “எங்க வீட்டுப் பெண்ணா நினைச்சிதானேம்மா உன்னை அனுப்பனோம், நீ போய் பொய் சொல்லிட்டியேம்மான்னு மக்கள் கேட்ட வார்த்தை,” என்றார். அவருடைய பேச்சுக்கு ஆடியன்ஸ் பக்கமிருந்து 'பொய், பொய்' என்று குரல் எழுந்தது. அவருக்குப் பதிலளித்துப் பேசிய கமல்ஹாசன், “இவ்வளவு கோபப்பட வேண்டிய அவசியமே கிடையாது.
ஒரு சின்ன விஷயத்துக்காக பொய் சொன்னாங்க. அப்படின்னா அரசியல்வாதிங்களை எல்லாம் ஏன் விட்டு வச்சீங்க. இவ்வளவு கோபம் ஒரு சின்ன பொன்னு மேல காட்றீங்களே. குண்டர் சட்டத்துல உள்ள போக வேண்டியவங்க எல்லாம் நம்ம மேல அதை பாய்ச்சிக்கிட்டிருக்காங்களே. இந்த கோபத்தை பாதுகாத்து வையுங்கள். அதை வெளிக் கொண்டு வரவேண்டிய காலம் விரைவில் வரும். நியாயமான நேரத்துல எதிர்த்துப் பேசுங்க, கோபத்தை எல்லாம் ஜுலி பேர்லயும், காயத்ரி பேர்லயும் வீணடிச்சிடாதீங்க. அதை சரியான நேரத்துல, சரியான பாதையில பயன்படுத்துங்க,” என ஆவேசமாகப் பேசினார்.
திரும்பவும் யாருக்கு உள்ளே போக விருப்பமிருக்கிறது என்று கேட்டதற்கு ஆர்த்தி மட்டும் உள்ளே போக விரும்புவதாகச் சொன்னார். சக்தி யாரையாவது ட்ரிகர் செய்ய வேண்டுமானால் உள்ளே போகிறேன் என்றார். காயத்ரி உள்ளே போக விருப்பமில்லை என்றார். பரணி அவருடைய உறவினர்களுக்கு விபத்து ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பதால் தற்போது போக முடியாது என்று சொன்னார். ஜுலி பேசும் போது, மக்கள் ஆதரவு இருந்தால் போக விரும்புகிறேன் என்றார்.
ஓவியா திரும்பவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர வாய்ப்பில்லை என்பதை ஓவியாவே வெளியிட்ட வீடியோ மூலம் கமல்ஹாசன் அரங்கில் போட்டுக் காட்டினார். பிக் பாஸ் மூலம் தன்னைப் புகழ் பெற வைத்த ஓவியாவே பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக தான் வராமல் இருக்கும் வீடியோவை வழங்காதது ஆச்சரியமாக இருந்தது.
ஆனாலும், நேற்று அரங்கிற்கு வந்த போட்டியாளர்களில் ஆர்த்தி, ஜுலி இன்று திரும்பவும் 'பிக் பாஸ்' வீட்டிற்குள் நுழைகிறார்.
நேற்றைய நிகழ்ச்சியில் ஆரவ்விற்கான குறும்படமும், கமல்ஹாசனின் கோபமும், ஆர்த்தி,ஜுலி யின் ரீ-என்ட்ரியும் இந்த வார நிகழ்ச்சியைப் பரபரப்பாக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Post a Comment