Ads (728x90)

இலங்கை அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் வென்று தொடரை கைப்பற்றிய நிலையில், எஞ்சியுள்ள ஆட்டங்களில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார். இந்தியா - இலங்கை அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 போட்டியிலும் வென்று இந்தியா முன்னிலை வகிக்க, 3வது போட்டி பல்லெகலே சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்தது.

இதில் பூம்ராவின் துல்லியமான வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இலங்கை அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 217 ரன் குவித்தது. திரிமன்னே 80, சண்டிமால் 36, வர்தனா 29 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் பூம்ரா 5, ஹர்திக், அக்சர், குல்தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து 50 ஓவரில் 218 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 15.1 ஓவரில் 61 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ரோகித் ஷர்மா - டோனி ஜோடி 5வது விக்கெட்டுக்கு அபாரமாக விளையாடி ஆட்டமிழக்காமல் 157 ரன் சேர்த்து அசத்தியது. ரோகித் 124 ரன் (145 பந்து, 16 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 67 ரன் (86 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெற்றியை வசப்படுத்தினர். இந்திய அணி வெற்றிக்கு 8 ரன் மட்டுமே தேவைப்பட்ட நிலையில், ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை மைதானத்துக்குள் வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டதால் ஆட்டம் அரை மணி நேரத்துக்கு தடைபட்டது குறிப்பிடத்தக்கது.

பரபரப்பான ஆட்டத்தில் வென்றது குறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி கூறியதாவது: சிறிய இலக்கை துரத்தும்போது அடுத்தடுத்து விக்கெட் சரிந்தால் தடுமாற்றம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். இரண்டு அல்லது மூன்று முறை இதுபோல நிகழ்ந்தால் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. இதற்கு முன்பாக சிறிய இலக்குகளை மிக எளிதாக எட்டியிருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

பல்லெகலே ஆடுகளம் பேட்டிங்குக்கு சவாலாக இருந்தது என்றே சொல்ல வேண்டும். ரோகித்தும் டோனியும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இது போன்ற நெருக்கடியான தருணங்களில் எப்படி விளையாட வேண்டும் என்பதை நடுவரிசை வீரர்கள் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இளம் வீரர்களுக்கு இது நல்ல பாடமாக அமைந்தது. பூம்ராவும் அபாரமாகப் பந்துவீசினார். அவர் மூன்று ஆட்டத்தில் 11 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். நிர்ணயிக்கப்பட்ட ஓவர் போட்டிகளில் எங்களின் துருப்புச்சீட்டு பூம்ரா தான். குறிப்பாக, இறுதிக்கட்ட ஓவர்களில் அவரது செயல்பாடு அற்புதம். எஞ்சியுள்ள போட்டிகளில் இதுவரை விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டதால் பரிசோதனை முயற்சிகளை மேற்கொள்வதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கிறேன். இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார். ஹாட்ரிக் வெற்றியுடன் 3-0 என முன்னிலை பெற்ற இந்தியா தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், 4வது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் நடக்க உள்ளது. கடைசி போட்டி செப். 3ம் தேதியும், டி20 போட்டி செப். 6ம் தேதியும் இதே மைதானத்தில் நடைபெற உள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget