ஸ்பெயின் நாட்டில் வாலென்சியா நகரில் வசிக்கும் ஃபெர்னான்டோ அபெலெனாஸ் குழாய் சீர் செய்பவராக இருந்தார். தற்போது அறைகலன்கள் செய்யக்கூடியவராக மாறிவிட்டார். தன்னுடைய தொழிலை விளம்பரப்படுத்துவதற்குப் புதுமையான உத்தியைக் கடைபிடித்திருக்கிறார். நகரின் பரபரப்பான ஒரு பாலத்துக்கு அடியில், தூணின் மீது தன்னுடைய அலுவலகத்தை யாருக்கும் தெரியாமல் அமைத்திருக்கிறார். இந்த அறையில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம். மேஜை, நாற்காலியை விரித்து அலுவலக வேலைகளைச் செய்யலாம். மேஜையைப் படுக்கையாக மாற்றிக்கொள்ளலாம். விளக்கு வசதியும் செய்யப்பட்டிருக்கிறது. “இந்த வீட்டில் ஒரே குறை பாலத்தில் செல்லும் வாகனங்களின் இரைச்சல். அதற்கு காதுகளில் பஞ்சு வைத்துவிட்டால் போதும். சிறிய இடத்தில் கூட வீடு, அலுவலகங்களை கட்டலாம் என்பதற்காக இதை உருவாக்கினேன். இந்த வீட்டை புகைப்படங்களாகவும் வீடியோவாகவும் எடுத்துவிட்டேன். அதை வைத்து விளம்பரம் செய்துகொள்வேன். அரசாங்க அதிகாரிகள் விரைவில் இந்த இடத்தைக் கண்டுபிடித்து, எல்லாவற்றையும் அகற்றிவிடுவார்கள்” என்கிறார் ஃபெர்னான்டோ.
புதுமையான விளம்பரம்!
இங்கிலாந்திலுள்ள நாட்டிங்ஹாம்ஷையரில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. பார்வையாளர்கள் உணவுப் பொருட்களையும் பானங்களையும் அரங்கத்துக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால் மதுபானங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பரிசோதனை செய்யப்பட்டே உள்ளே அனுப்பப்பட்டனர். திடீரென்று ஓர் இயந்திரம் அலற ஆரம்பித்தது. அங்கே இருந்த பெண்ணின் முகம் மாற்றம் அடைந்தது. காவலர்கள் அந்தப் பெண்ணைப் பரிசோதனை செய்தனர். அவரது உணவுப் பொட்டலத்தைப் பிரித்தனர். நீளமான பன் நடுவே ஒரு வோட்கா பாட்டில் இருந்தது . பெண் காவலர்கள் அவரது ஆடையைப் பரிசோதித்தபோது, இரண்டு கால்களிலும் மது பாட்டில்களை வைத்து, ஒரு டேப் மூலம் விழாதவாறு ஒட்டியிருந்தார். “இதுவரை இப்படி யாரும் மதுவைக் கடத்தி நாங்கள் பார்த்ததில்லை. விளையாட்டு முடிந்த பிறகு பாட்டில்களைப் பெற்றுக்கொள்ளச் சொன்னோம். ஆனால் அவர் வரவேயில்லை” என்கிறார் ஒரு காவலர்.
விநோதமான கடத்தல்…
வெங்காயம், பூண்டு, மீன் போன்றவை சமைத்த பிறகு சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால் சமைப்பதற்கு முன்பு துர்நாற்றம் அடிக்கும். எவ்வளவுதான் கைகளைச் சுத்தம் செய்தாலும் துர்நாற்றம் வந்துகொண்டே இருக்கும். இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பார் வந்திருக்கிறது. அம்கோ என்ற நிறுவனம் தயாரித்திருக்கும் ‘ரப்-அ-வே’ பார் துர்நாற்றத்தைப் போக்குகிறது. சாதாரண சோப்புகளைப் போலவே இதையும் கைகளில் நன்றாகத் தேய்த்து, தண்ணீரால் கழுவ வேண்டும். ஒரு சாதாரண சோப் செய்வதைவிட பல மடங்கு இது வேலை செய்கிறது. ஒரு ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பார் விலை 512 ரூபாய்.
Post a Comment