ம
னித வாழ்க்கையில் இன்று செல்பி முக்கியப் பங்கு வகிக்கிறது. எங்கேயும் எப்போதும் செல்பி எடுப்பதையே மிக முக்கியமான பொழுதுபோக்காகப் பெரும்பாலான மக்கள் கருதுகிறார்கள். சிலர் அளவுக்கு அதிகமான ஆர்வத்தால் ஆபத்துகளைக் கூடப் பொருட்படுத்தாமல் செல்பி எடுத்து, உயிரை விட்டிருக்கிறார்கள். செல்பி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஸ்டெஃபானி லே ரோஸ் என்பவர், ‘ஸ்டெஃப்டைஸ்’ என்ற அமைப்பை ஆரம்பித்திருக்கிறார். “செல்பிக்கு எதிரான நடவடிக்கைதான் என்னுடைய அமைப்பின் நோக்கம்.
இதற்காக நான் பிரபலமான சுற்றுலாத் தலங்களுக்குச் செல்கிறேன். தரையில் இறந்ததுபோல் விழுந்து கிடக்கிறேன். இதை என் நண்பர்கள் படம் பிடிக்கிறார்கள். இவற்றை இன்ஸ்டாகிராமில் வெளியிடுகிறேன். இதைப் பார்க்கும் பலரும் செல்பி மோகத்திலிருந்து விடுபடுவார்கள் என்று நம்புகிறேன். இதுவரை ஈபிள் டவர், பாரிஸ் அருங்காட்சியகம், சான்பிரான்சிஸ்கோ கோல்டன் கேட் பிரிட்ஜ், இத்தாலியில் உள்ள கொலோசியம் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களில் படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறேன். இவை தவிர, பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை, மலைப் பிரதேசம், பேருந்து நிறுத்தம், ரயில் நிலையங்கள், கழிவறை, சாலை என்று பல இடங்களிலும் படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறேன்.
இந்தப் படங்களுக்காக சிறப்புத் தொழில்நுட்பம் எதையும் பயன்படுத்துவதில்லை. எனக்கு படங்களின் நேர்த்தி முக்கியமில்லை, என்னுடைய நோக்கம் செல்பிக்கு எதிராக விழிப்புணர்வு ஊட்டுவதுதான். இப்படிக் கண்ட இடங்களிலும் கீழே விழுந்து படம் எடுத்துக்கொள்வது எளிதான காரியம் இல்லை. சுத்தத்தை நினைத்தால் ஒரு படம் கூட எடுத்திருக்க முடியாது. என்னால் சிலர் செல்பி ஆர்வத்திலிருந்து விடுபட்டாலே போதும்” என்கிறார் ஸ்டெஃபானி.
செல்பிக்கு எதிரான போராளி!
ஜ
ப்பானைச் சேர்ந்த பெப்பர் ரோபோட் நிறுவனம், புத்த துறவி ரோபோட்களை வைத்து இறுதிச் சடங்குகளை மேற்கொண்டு வருகிறது. “இறுதிச் சடங்குகளை நிகழ்த்தக்கூடிய மனிதர்கள் எளிதில் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் செலவு அதிகமாகிறது. அதற்காகத்தான் இந்த ரோபோட்டை உருவாக்கியிருக்கிறோம். ஜப்பானிய பாரம்பரிய உடையை அணிந்துகொண்டு மனிதர்களைப் போலவே இறுதிச் சடங்குகளை நிகழ்த்திவிடுகிறது. அடுத்த வாரம் டோக்கியோவில் சர்வதேச இறுதிச் சடங்கு மற்றும் கல்லறை கண்காட்சி நடைபெற இருக்கிறது. அதில் இந்தப் புத்த துறவி ரோபோட் பங்கேற்கிறது. ஒரு ரோபோட்டின் விலை 30 ஆயிரம் ரூபாய்” என்கிறார் பெப்பர் ரோபோட் நிறுவனர்.
இறுதிச் சடங்கு செய்யும் ரோபோட்!
தாய்லாந்தில் வசிக்கும் தனாபூம் லேகியென் அதிகாலை எழுந்து, தன் மகன் அறைக்குள் வந்தார். அங்கே அவர்கள் வளர்த்த பூனை கடுமையான காயங்களுடன் இறந்து கிடந்தது. பயந்து போனவர், மகனின் படுக்கையைப் பார்த்தார். அங்கே ஏதோ விலங்கின் செதில்கள் கிடந்தன. “பயத்தில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு இடமாகப் பார்த்தேன். 10 அடி நீளமுள்ள ஒரு மலைப்பாம்பு கிடந்தது கண்டு அதிர்ந்து போனேன். நண்பர்களின் உதவியுடன் அந்தப் பாம்பை வீட்டிலிருந்து அகற்றினோம். ரொம்ப ஆக்ரோஷமாகப் பாம்பு சீறியது. என் 13 வயது மகன் எப்போதும் அவன் அறையில்தான் தூங்குவான். நல்ல வேளையாக நேற்று என் அறையில் தூங்கினான். நினைத்துப் பார்க்கும்போதே பயமாக இருக்கிறது” என்கிறார் தனாபூம்.
Post a Comment