Ads (728x90)

நடிகர் செல்வா ஒரு காலத்தில் சிறு பட்ஜெட் படங்களின் நாயகன். கோல்மால் என்ற படத்தையும் இயக்கினார். தற்போது ரஜினியின் பிறந்த நாளான 12.12.1950 என்ற பெயரில் ஒரு படம் இயக்குகிறார். இது ரஜினி ரசிகர்கள் பற்றிய கதை. இதில் அவர் கபாலி செல்வா என்ற கேரக்டரிலும் நடிக்கிறார். ரஜினி பிறந்த நாளை தலைப்பாக கொண்டு படம் இயக்குவது பற்றி அவர் கூறியதாவது:

பல வருடங்களுக்கு முன்பே இந்த மாதிரி ஒரு படம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. சமீபத்தில் தான் கதையை முடித்து தயாரிப்பாளர் கோட்டீஸ்வர ராஜுவிடம் சொன்னேன். கதையை கேட்டவுடன் ஓகே சொன்னார். 40 ஆண்டுகளாக நான் ரஜினி ரசிகனாக இருந்து வருகிறேன். 28 வருடங்களுக்கு முன்பு கேஸினோ தியேட்டர் அருகில் ரஜினி போஸ்டரை கிழித்துக் கொண்டிருந்தார்கள். நான் கோபப்பட்டு அவர்களை அடித்து விட்டேன். அந்த சம்பவத்தையும் படத்தில் ஒரு காட்சியாக வைத்திருக்கிறேன். அதுவும் இந்த படம் உருவாக ஒரு விதையாக அமைந்தது.

பிப்ரவரியில் கதை ஓகே ஆனவுடன் ரஜினியிடம் சென்று ஆசிர்வாதம் வாங்கினேன். வேர்ல்ட் ஆண்டி ஸ்மோக்கிங் என்ற அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறேன். அதைப்பற்றி ரஜினியிடமும் சொல்லி வாழ்த்து பெற்றேன். இந்த வருடம் ரஜினி பிறந்த நாளில் 1 லட்சம் குழந்தைகளிடன் எதிர்காலத்தில் புகை பிடிக்க மாட்டேன் என கையெழுத்து வாங்கிய பாண்ட் பத்திரங்களை அவரது பிறந்த நாள் பரிசாக ஒப்படைக்கப் போகிறேன்.

இதற்கு முன்பு கோல்மால் என்ற படத்தை இயக்கியிருக்கிறேன். அப்போது செல்வா என்ற பெயரில் தான் இயக்கினேன். ஒரு ரஜினி ரசிகனாக என் பெயருக்கு முன் ரஜினியின் அடைமொழியை போட்டுக் கொள்ள விரும்பினேன். இந்த படத்தில் அதை போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. அது தான் கபாலி செல்வா என என் பெயர் மாற காரணம். இந்த கதைக்கு நாயகி தேவையில்லை என முடிவு செய்தேன். அதனால் நாயகி யாரும் படத்தில் இல்லை.

ரஜினி ரசிகர்களுக்காக இந்த படம் எடுக்கவில்லை. எல்லா ரசிகர்களுக்காகவும் தான் இந்த படம். எல்லோரையும் படம் கவரும். யாருமே சம்பளத்தை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் எனக்காக நடித்துக் கொடுத்தனர். தம்பி ராமய்யா, யோகி பாபு, எம் எஸ் பாஸ்கர், ரமேஷ் திலக், குமரவேல், ஆதவன் ஆகியோரும் சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். என்றார் கபாலி செல்வா.

Post a Comment

Recent News

Recent Posts Widget