இலங்கைக் கிரிக்கெட் அணியை மீட்டெடுக்கும் வல்லமை எம்மிடம் இருக்கின்றது என்றும் அதற்கான வழியும் எமக்குத் தெரியும் என்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து தான் ஒருபோதும் விலகத் தயாரில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கிரிக்கெட் அணி மோசமான தோல்விகளை சந்தித்து வருவதால் இலங்கை அணியை மீட்டெடுக்க வேண்டுமானால் தற்போதைய இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால உட்பட கிரிக்கெட் சபை பதவிவிலக வேண்டும் என்று முன்னாள் அணித் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அர்ஜுன ரணதுங்கவின் இந்தக் கூற்றுக்கு பதிலளிக்கும் வகையில் பி.பி.சி. சர்வதேச செய்திச் சேவைக்கு கருத்து தெரிவிக்கும்போதே கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உடனடியாக பிரதிபலன் இல்லாததால் பதவி விலகவேண்டும் என்றா அவர்கள் வலியுறுத்துகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ள திலங்க சுமதிபால, நீண்டகால திட்டத்துடன் நாம் வேலை செய்துகொண்டிருக்கிறோம்.
அதற்கான திட்டத்தை வகுத்து அதற்கமையவே நாம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த பலனை நாம் அடைவதற்கு குறைந்தது நான்கு ஆண்டுகள் செல்லலாம்.
ஆனால் நாம் நிச்சயம் அதன்மூலம் நீண்டகால பலனை அடைவோம் என்றும் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment