ஆண்ட்ரியா, அஞ்சலி,
ஜே.எஸ்.கே.சதீஷ்குமார்,
அழகம்பெருமாள், சாரா ஜார்ஜ், ஏட்ரியன்.
ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர்
இசை: யுவன் சங்கர்ராஜா
தயாரிப்பு: ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன்
இயக்கம்: ராம்
காதலில் தோல்வியடைந்த வசந்த் ரவியும், திருமண வாழ்வில் தோல்வியடைந்த ஆண்ட்ரியாவும் காதலித்து, லிவிங் டூ கெதராக வாழ்கிறார்கள். தாங்கள் இழந்ததை, ஒருவருக்குள் இன்னொருவர் தேடுகிறார்கள். இந்த அதீத காதலே வசந்த் ரவிக்கு ஆண்ட்ரியா மீது வீண் சந்தேகங்களைக் கிளப்புகிறது.
கடைசியில் அதுவே வில்லனாகி இருவரையும் பிரிக்கிறது. பிரிவுக்குப் பிறகு வசந்த் ரவி, பெண்கள் மீதான வெறுப்பில், அவர்களை ஆசை வலையில் விழவைத்து ரசிக்க ஆரம்பிக்கிறார். ஒரு நிகழ்வின் மூலம் தன் தவறையும், ஆண்ட்ரியாவின் நேர்மையையும் உணர்கிறார். மீண்டும் ஆண்ட்ரியாவை தேடிச் செல்கிறார் அவர் வசந்த் ரவியை ஏற்றாரா என்பது கிளைமாக்ஸ். சினிமாவுக்கென்று இருக்கிற பார்முலாக்களை அவ்வப்போது சில இயக்குனர்கள் உடைத்திருக்கிறார்கள்.
ஆனால், அதை சுக்குநூறாக்கி உடைத்திருக்கிறார் ராம். ஒரு விஷயத்தை ேநர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக, துணிச்சலாகச் சொல்வது மட்டுமே சினிமா என்ற புதிய பார்முலாவையும் உண்டாக்கி இருக்கிறார். காட்சிகளையும், கதைக்களத்தையும் வானத்தில் இருந்து பார்ப்பது, கதை மாந்தர்களின் உணர்வுகளுடன் விவாதிப்பது, போகிறபோக்கில் நாட்டு நடப்புகள் பற்றி கமென்ட் அடிப்பது என திரைக்கதை வடிவத்தில் புதிய பாதையைப் போட்டிருக்கிறார். வெல்டன் ராம்.
சாலையோரத்தில் விபத்தில் சிக்கி இறந்து கிடக்கும் வடநாட்டு கட்டிடத் தொழிலாளி, கிரிக்கெட்டில் இந்தியா இலங்கையிடம் தோற்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் ராமேஸ்வர மீனவப் பெண்கள், மனைவியை கிளப்பில் இன்னொரு ஆணுடன் ஆடவிட்டு ரசிக்கும் கணவன், துளியளவும் களங்கமின்றி மனைவியை நேசிக்கும் போலீஸ் என, யதார்த்த மாந்தர்கள் படத்தைத் தூக்கிச் சுமந்திருக்கிறார்கள்.
உலகமயமாக்கலும், தகவல் தொடர்பின் வளர்ச்சியும், அது உருவாக்கிக் கொடுத்துள்ள புதிய பணி முறைகளும் தனிமனித வாழ்க்கையில் எவ்வளவு தூரம் ஊடுருவிக் கிடக்கிறது என்பதையும், பணமும்; காதலும்; காமமும் மனித வாழ்க்கையில் இப்போது எத்தகைய மாறுதலை அடைந்துள்ளது என்பதையும், பத்து புத்தகங்கள் படித்து புரிந்துகொள்ள வேண்டியதைச் சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் படத்தில் சொல்லியிருக்கிறார் ராம்.
புதுமுகம் என்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல், பிரபு நாத் என்ற இன்றைய யதார்த்த இளைஞனாக திரையில் வாழ்ந்திருக்கிறார், வசந்த் ரவி. நேர்மையான பணியாளர், பாசம் மிகுந்த அம்மா, கணவன் தவறானவாக இருந்தும் கூட அவன் தரப்பு நியாயத்தைப் பேசும் மனைவி, சந்தேகம் கொண்ட நண்பனை அடித்து விரட்டும் ைதரியசாலியாக, ஆண்ட்ரியா மிரட்டியிருக்கிறார்.
அவரது சினிமா கேரியரை தரமணிக்கு முன், பின் என்று எழுதலாம். எல்லா பலவீனங்களும் நிறைந்த அசிஸ்டென்ட் கமிஷனராக வரும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமாரின் நடிப்பும், உடல்ெமாழியும் ஆச்சரியம். அவரது மனைவியாக வரும் லிஸி ஆண்டனி, ஒரு காட்சி என்றாலும், அத்தனை லைக்குகளையும் அள்ளிக்கொண்டு போகிறார். சில காட்சிகளிலே வந்தாலும் தனது நடிப்பு முத்திரையை பதித்து விட்டு செல்கிறார்
அஞ்சலி. போலீஸ்காரர் அழகம்பெருமாள், கிளைமாக்ஸில் சிங்கிள் ஷாட்டில் அசத்தியிருக்கிறார்.
ஆண்ட்ரியாவின் தோழி சாரா ஜார்ஜ், அலுவலக மேலாளர் அபிஷேக் டி.ஷா, ஆண்ட்ரியாவின் மகன் ஏட்ரியன் என அனைவரும், நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் பிரதிபலித்து இருக்கிறார்கள். பெண்கள் அனைவரும், ஏதோ ஒரு இடத்தில் சபலத்தில் விழுந்து விடுபவர்கள் என்ற கருத்து தொனிப்பது போன்ற திரைக்கதை அமைந்திருப்பது உறுத்தல்.
இதுபோல் சில குறைகளை தவிர்த்திருக்கலாம். யுவன் சங்கர்ராஜா தனது அடுத்த பயணத்தை அசத்தலாகத் தொடங்கியிருக்கிறார். பின்னணி இசையுடன், காட்சி சூழலுக்கான பாடல்களைக் கலந்து இசை சாம்ராஜ்யத்தை நடத்தியிருக்கிறார். தேனி ஈஸ்வரின் கேமரா, சென்னை மக்கள் இதுவரை பார்த்திராத தரமணியைப் பிரமாண்டமான கோணத்தில் காட்டியிருக்கிறது. தமிழ் சினிமாவின் இன்னொரு மைல் கல், ராமின் தரமணி.
Post a Comment