நடிப்பு: அசோக் செல்வன், பிரியா ஆனந்த், நாசர், சமுத்திரக்கனி, பாலசரவணன், மாரிமுத்து, ரமா.
ஒளிப்பதிவு: பி.கே.வர்மா
இசை: நிவாஸ் கே.பிரசன்னா
தயாரிப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், ரமணியம் டாக்கீஸ்.
இயக்கம்: த.செ.ஞானவேல்
தந்தை மாரிமுத்துவிடம் எப்போதும் அர்ச்சனை வாங்கும் ஆவரேஜ் ஸ்டூடன்ட், அசோக் செல்வன். மாநிலத்தில் முதல் மாணவியான பிரியா ஆனந்த், ஜர்னலிசம் படிக்க கல்லூரியில் சேர்கிறார். அவரது மனதில் இடம்பிடிக்க, அதே கல்லூரியில் சேர்கிறார் அசோக் செல்வன். ஒருநாள் காதலைச் சொல்கிறார். ‘ஏதாவது சாதனை பண்ணிட்டு வா’ என்கிறார், பிரியா ஆனந்த். காதல் தோல்வியில் தற்கொலை செய்யப்போன இடத்தில், உள்ளூர் தாதா சமுத்திரக்கனியின் மகனைக் காப்பாற்றியவராக திடீர் பாராட்டு கிடைக்கிறது. மகனைக் காப்பாற்றியதற்காக சில காரியங்களை அசோக் செல்வனுக்குச் சாதகமாகச் செய்து, பிரியா ஆனந்தே தேடி வந்து அசோக் செல்வனிடம் காதலைச் சொல்ல வைக்கிறார் சமுத்திரக்கனி.
ஒருநாள் அசோக் செல்வனின் போலி முகத்திரை கிழிகிறது. சமுத்திரக்கனி கொல்லப்படுகிறார். தந்தை விரட்டி அடிக்கிறார். ஆனால் மிடில் பெஞ்ச் பார்ட்டி அசோக் செல்வன், முதல் பெஞ்ச் பார்ட்டியாகிறார். அப்போது பிரியா ஆனந்த் அவரைத் தேடி வருகிறார். அது எப்படி என்பது கிளைமாக்ஸ். மிடில் பெஞ்ச் மாணவனாக அசோக் செல்வன் கச்சிதம். இயலாமை, பொறாமையை முகத்தில் எளிதில் கொண்டு வருகிறார். பிரியா ஆனந்த் சென்டிமென்டில் உருக வைக்கிறார். அவர் தனது மைனஸ் பாயின்டுகளைச் சொல்லும் இடம், நச். மும்பை வேலு நாயக்கர், மலேசியா கபாலி கேரக்டரின் தமிழ்நாட்டு வடிவம்தான் சமுத்திரக்கனியின் கேரக்டர். அதை நிறைவாகச் செய்திருக்கிறார்.
பாலசரவணன் கிச்சுகிச்சு மூட்டுகிறார். நாசர், ஜான் விஜய், மாரிமுத்து, ரமா ஆகியோரும் மனதில் நிற்கிறார்கள். பி.கே.வர்மாவின் ஒளிப்பதிவும், நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையும் படத்துக்கு நன்கு கைகொடுத்துள்ளது. ஆட்களைக் கொல்லும் சமுத்திரக்கனி சிறந்த மனிதாபிமானியாக இருப்பது, மிடில் பெஞ்ச் ஆளாக இருந்தாலும், நல்ல மனிதரான அசோக் செல்வன் அவரது பித்தலாட்டங்களுக்கு உடன்படுவது நெருடல். கிளைமாக்சில் லேசான செயற்கைத்தனமும், பிரச்சார நெடியும் தெரிகிறது. சில குறைகள் இருந்தாலும், கூட்டத்தில் நிற்கும்போதும் தனியாகத் தெரிகிறான் இந்த மிடில் பெஞ்ச் பார்ட்டி.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment