இதில் ‘பி’ அறை மட்டும் இதுவரை திறக்கப்படவில்லை. இந்த அறையை திறக்க திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த அறையில்தான் மற்ற அறைகளில் உள்ளதை விட கூடுதல் பொக்கிஷங்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறை 100 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளது என்றும், இந்த அறையை திறந்தால் நாட்டுக்கு ஆபத்து ஏற்படும் என்றும் மன்னர் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் சார்பில் ஏற்கனவே ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த ‘பி’ அறை இதற்கு முன்பு பலமுறை திறக்கப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம் மற்றும் முன்னாள் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் ஆகியோர் கூறி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, ‘பி’ அறையை திறப்பது குறித்து திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்துடன் ஆலோசனை நடத்த சிறப்பு வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கோபால் சுப்பிரமணியம் நேற்று திருவனந்தபுரம் வந்தார். காலையில் பத்மநாபசுவாமி கோயிலுக்கு சென்ற அவர் கோயில் முக்கிய நிர்வாக அதிகாரி ரதீசனிடம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் மாலையில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினரை கவுடியாரில் உள்ள அவர்களது அரண்மனையில் சந்தித்து பேசினார். அப்போது கோபால் சுப்பிரமணியத்திடம், மன்னர் குடும்பத்தை சேர்ந்த கவுரி லட்சுமிபாய் எந்த காரணம் கொண்டும் ‘பி’ அறையை திறக்கக் கூடாது என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், ‘பி’ அறையை திறப்பது குறித்து கோயில் தந்திரியிடம் ஆலோசிக்க வேண்டும் என்றும், தந்திரியோ, உச்ச நீதிமன்றமோ தன்னிச்சையாக ‘பி’ அறையை திறக்க நடவடிக்கை எடுத்தால் தங்களது குடும்பம் அதற்கு ஒத்துழைக்காது என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்தார்.
Post a Comment