Ads (728x90)

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், கோவில் இல்லை; அது ஒரு கல்லறை தான்,'' என, ஆக்ரா நீதின்றத்தில், ஏ.எஸ்.ஐ., எனப்படும், இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை தெரிவித்து உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆக்ராவில், யமுனை ஆற்றுக்கரையில், உலக அதிசயங்களில் ஒன்றான, தாஜ் மஹால் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக்ரா மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:

ஆக்ராவில், 'தேஜோ மஹாலய' என்ற சிவன் கோவில் இருந்தது. இந்த கோவிலைத் தான், மொகலாய மன்னர் ஷாஜகான், கல்லறையாக மாற்றி, தாஜ் மஹால் கட்டினார்.அங்கு, சிவன் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள், அடையாளங்கள் இப்போதும் உள்ளன. அதனால், தாஜ் மஹாலுக்குள், ஹிந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கம் கேட்டு, மத்திய அரசு, மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், உள்துறை செயலர், தொல்பொருள் ஆய்வுத்துறை ஆகியவற்றுக்கு, 'நோட்டீஸ்' அனுப்பியது.
மத்திய கலாசாரத்துறை அமைச்சகம், ' தாஜ்மஹாலில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை,' என, லோக்சபாவில், 2015ல் தெரிவித்தது. இந்நிலையில், ஆக்ரா நீதிமன்றத்தில், தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில், தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனு:

தாஜ்மஹால், இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்றாலும், அங்கு, மதம் தொடர்பான எந்த நிகழ்ச்சியும், எப்போதும் நடந்ததில்லை. வரலாற்று ஆய்வின்படியும், ஆவணங்கள் ஆய்வின்படியும், யமுனை நதிக்கரையில், சிவன் கோவில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை.

சிவன் கோவில் தான், தாஜ்மஹாலாக மாற்றி கட்டப்பட்டுள்ளதாக, மனுதாரர்கள், எந்த ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்துள்ளனர். அதனால், அந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆய்வுத்துறையின் பதில் மனு மீது விளக்கம் கேட்டு, மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை, அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget