அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்தால் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவோம் என்று ஈரான் மறைமுகமாக மிரட்டல் விடுத்துள்ளது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய 6 வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட மாட்டோம் என்று ஈரான் உறுதி அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. தற்போது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க அதிபர் ட்ரம்ப் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
“ஒருவேளை மீண்டும் பொருளாதார தடைகளை விதித்தால் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவோம்” என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி அண்மையில் எச்சரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் ஈரான் அணுசக்தி கழக தலைவர் அலி அக்பர் சேலா கூறியிருப்பதாவது: அணுசக்தி ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்தால் அடுத்த 5 நாட்களுக்குள் எங்களால் 20 சதவீதம் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்ட முடியும். எனினும் அதற்கு அவசியம் இருக்காது என்றே கருதுகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஈரான் அணு உலைகளில் யுரேனியத்தை 5 சதவீதம் அளவுக்கு மட்டுமே செறிவூட்ட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 20 சதவீதம் அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டினால் அதன்மூலம் அணுஆயுதங்களைத் தயாரிக்க முடியும். ஒப்பந்தத்தை முறித்தால் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவோம் என்று அமெரிக்காவுக்கு ஈரான் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
Post a Comment