நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மங்களகரமான வரவு – செலவுத் திட்டம் பல நிவாரணங்களை கொண்டதாக அமையும். ஆகவே அமைச்சர் மங்களவின் மங்களகரமான பட்ஜெட்டை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பாருங்கள் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் சஜித் பிரேமதாஸ மேலும் உரையாற்றுகையில்,
தற்போது நல்லாட்சி அரசாங்கத்தினால் வீடமைப்பு திட்டத்திற்கு பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. வீடமைப்பு செயற்பாடுகள் மும்முரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் முன்னைய ஆட்சியின் போது வீடுகள் நிர்மாணிப்பதற்கு எந்தவொரு வேலைத்திட்டமும் இருக்கவில்லை. மக்களின் பணமும் உடமைகளும் பெருமளவில் கொள்ளையடிக்கப்பட்டன.
வறுமைக் கோட்டின் கீழ் அப்பாவி மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்ப முன்னைய ஆட்சியினருக்கு எந்தவொரு கொள்கையும் திட்டமும் இருக்கவில்லை. என்றாலும் தன்னுடைய குடும்பத்தினருக்கு மாத்திரம் வீடுகளும் சொகுசான வாழ்க்கையும் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் அப்பாவி மக்கள் வீதிகளில் துன்பம் கொண்டனர்.
எனினும் நல்லாட்சி அரசாங்கம் வந்த பிறகு வீடமைப்பு துறையை பலப்படுத்தி வாழ்வதற்கு வசதியில்லாமல் வாடும் மக்களுக்கு நிவாரணங்களையும் பெற்றுக்கொடுத்து வீடுகளையும் வழங்கி வருகின்றோம். எனினும் எமது இரு வருட ஆட்சியை இருள் சூழ்ந்தது என கூறுகின்றனர். எனினும் முன்னைய பத்து வருடங்களே இருள் சூழ்ந்த காலம் என்பதனை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் அடுத்த வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டத்தில் வீடமைப்பு துறைக்கு மங்கள சமரவீர முக்கியத்துவம் வழங்குவார் என்று எதிர்பார்க்கின்றேன். நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மங்களகரமான வரவு – செலவுத் திட்டம் பல நிவாரணங்களை கொண்டதாக அமையும். மேலும் முன்பு நாட்டின் வளங்களை மோசடி செய்த அரசியல்வாதிகளுக்கு பாடமாக அமையும்.ஆகவே அமைச்சர் மங்களவின் மங்களகரமான பட்ஜெட்டை மக்கள் ஆர்வத்துடன் எதிர்பாருங்கள் என்றார்.
Post a Comment