ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நான் விலகவுமில்லை, என்னை யாரும் விலக்கவுமில்லை. ஆகவே தற்போதும் அக்கட்சியின் தலைவராக தான் திகழ்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து கடன் சுமையை பேசி பூச்சாண்டி காண்பித்து வருகிறது. அதுவும் எமது ஆட்சிக்காலத்தில் பெறப்பட்ட கடனையே பேசிக்கொண்டிருக்கிறது. எனினும் எமது ஆட்சியில் சகல துறைகளிலும் அபிவிருத்தியையே முன்னெடுத்தோம். அவ் அபிவிருத்திகளை சகல இடங்களிலும் காணமுடியும்.
மேலும் அரசாங்கம் தற்போது வருமானவரி சட்டமூலம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் மக்களுக்கான சகல சலுகைகளையும் துண்டித்துள்ளது. இதற்கு முன்னர் செல்வந்தர்களிடமிருந்து மாத்திரம் வருமான வரி பெறப்பட்டது. இனி சகல தரப்பினரிடமிருந்தும் வரி பெறுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது.
மலர்களிலிருந்து தேன் பெறுவதுபோல் மக்களிடமிருந்து வரி அறவிடும் கொள்கையிலேயே நாம் செயற்பட்டோம். எனினும் அம்மலர்களை கசக்கி பிழிந்து தேன் பெறுவதுபோல் நல்லாட்சி அரசாங்கம் மக்களிடமிருந்து வரி அறவிடுவதற்கு எதிர்பார்க்கிறது. இது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையாகும்.
மேலும் மக்கள் மத்தியில் எம்மைப் பற்றிய வைராக்கியத்தை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. அதற்குப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றது. எனவே எம்மீதான அவமதிப்பு தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்.
மேலும் தற்போது ஊடக சுதந்திரம் இருப்பதாகக் குறிப்பிடுகின்றனர். எனினும் ஊடகங்கள் மீதான கெடுபிடிகள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அதேபோல் ஏனைய துறைகளிலும் நெருக்கடிகள் உள்ளன. எனவே நாட்டில் தற்போது முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும். அம்மாற்றத்தினை நாம் ஏற்படுத்துவோம். அதன் பின்னர் ஏற்கனவே நாம் வழங்கிய சலுகைகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவோம்.
மேலும் எமக்கெதிராக அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகள் இருக்குமாயின் அரசாங்கத்திலுள்ளவர்கள் எமக்கெதிராக நடவடிக்கை எடுக்காது விடமாட்டார்கள். நாம் குற்றம் இழைக்கவும் இல்லை, அதனால் சாட்சியும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment