இலங்கையானது விரைவில் சீனாவினதும் இந்தியாவினதும் பரிசோதனை மைதானமாக மாறப்போகின்றது. உலக நடப்புக்களைப் பார்க்கும்போது இந்த நிலைமை விரைவில் ஏற்படும் என்று தோன்றுகிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா காலூன்றியிருப்பதும் மத்தள விமான நிலையத்தில் இந்தியா காலூன்றப்போவதும் இந்த சமிக்ஞையை வெளிக்காட்டியுள்ளன என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அம்பாந்தோட்டையில் துறைமுகம் ஒன்றை அமைப்பது என்பது நூறு வருடங்களுக்கு முன்பிருந்த கனவாகும். அந்நிய ஆட்சிக்காலத்திலேயே இவ்வாறானதொரு திட்டம் காணப்பட்டது. ஆனால் கடந்த நூறு வருடங்களாக அதனை யாராலும் செய்ய முடியவில்லை. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ இந்தக் கனவை நனவாக்கினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையத்தை இந்தியாவும் இலங்கையும் இணைந்து அபிவிருத்தி செய்யப்போவதாக தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் விபரிக்கையிலேயே கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,-
பொய் வாக்குறுதிகளை வழங்கியே நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இன்று அந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன. தாம் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை மக்களும் உணர்ந்து கொண்டுள்ளனர். நாடு பாதிக்கப்பட்டுள்ளது. மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அரசாங்கமானது தொடர்ந்து நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
தற்போது அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், விற்பனை செய்யப்படவில்லை என்றும் ஒரு விளக்கத்தை அரசாங்கம் அளிக்கிறது. ஆனால் 99 வருடங்களுக்கு குத்தகை வழங்குகின்றது என்பது அதனை விற்பதற்கே சமமாகும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எமது பேரப்பிள்ளைகளுக்குக்கூட இந்த துறைமுகத்தின் உரிமை கிடைக்கப்போவதில்லை.
அதுமட்டுமன்றி அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பது என்பது கடந்த நூறுவருடகால கனவாகவே இருந்து வந்தது. காரணம் அந்நிய ஆட்சிக்காலத்திலேயே இந்த இடத்தில் ஒரு துறைமுகத்தை அமைப்பது இலங்கைக்கு பாரிய நன்மையை பெற்றுக்கொடுப்பதாக அமையும் என திட்டமிடப்பட்டது. ஆனால் அவர்களால் கூட அதனை செய்ய முடியவில்லை. அத்துடன் முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனாவினால் கூட அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைக்க முடியவில்லை. ஆனால் இந்த எல்லா விடயங்களையும் உடைத்தெறிந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ
பக் ஷ அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைத்தார். அவ்வாறு அமைத்த துறைமுகத்தை இன்று நல்லாட்சி அரசாங்கம் சீனாவுக்கு வழங்கியுள்ளது.
அத்துடன் நிறுத்திவிடாமல் அரசாங்கமானது தற்போது மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்கப்போவதாக தெரிவிக்கின்றது. இதனூடாக இந்தியாவும் தென்னிலங்கையில் காலூன்றப்போகின்றது. மத்தள விமான நிலையத்திற்கு 4200 ஏக்கர் காணி இந்தியா வசம் போகப்போகின்றது. இதன்மூலம் எதிர்காலத்தில் இலங்கையானது சர்வதேசத்தின் ஒரு பிடிக்குள் சிக்கிவிடும் அபாயம் இருக்கிறது.
குறிப்பாக கூறுவதென்றால் இலங்கையானது இந்தியாவினதும் சீனாவினதும் பரிசோதனை மைதானமாக எதிர்காலத்தில் அமையப்போவதையே இந்த செயற்பாடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இதற்கு ஏற்றாற்போல் உலக நடப்புக்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த உலக நடப்புக்களை பார்க்கும்போது எதிர்காலத்தில் இலங்கையானது சீனாவினதும் இந்தியாவினதும் பரிசோதனை விளையாட்டு மைதானமாக மாறிவிடும் அபாயம் காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றி திருகோணமலையிலும் இந்தியா காலூன்ற முயற்சிக்கின்றது. அங்கிருக்கும் எண்ணெய்த்தாங்கிகள் இந்தியாவிற்கு முக்கியமல்ல. மாறாக திருகோணமலையில் காணியே இந்தியா வுக்கு முக்கியமாக இருக்கிறது. எனவே இவ்வாறு சர்வதேச நாடுகளின் பிடிக்குள் இலங்கை சிக்கிவிடும் அபாயமே இருக்கிறது என்றார்.
Post a Comment