இலங்கையின் பிரதான மூன்று அதிவேக நெடுஞ்சாலைகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தூய்மையான ஹெல உறுமய அமைப்பின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீனாவின் செங்டொங் என்ற நிறுவனத்திற்கு கொழும்பு கட்டுநாயக்க, கொழும்பு சுற்றுவட்டார அதிவேக நெடுஞ்சாலை, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை 600 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
விற்பனை செய்யப்போவதில்லை என்று கூறிக்கொண்டு 35 வருடங்களுக்கு குத்தகைக்குத்தான் வழங்கினோம் என்று அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் பதிலளிப்பார்கள் என்பதை நாம் அறிவோம். இருப்பினும் 10 வருடங்களுக்கு மேலாக குத்தகைக்கு விடப்படுகின்ற ஒரு வளமானது விற்பனை செய்யப்படுகின்ற ஒன்றாகவே கருதப்படும்.
எவ்வாறாயினும் இந்த விடயம் குறித்து இன்று இடம்பெறவுள்ள அமைச்சரவை சந்திப்பிலும் பேசப்படவுள்ளது. இவ்வாறு நாட்டின் வளங்கள் அனைத்தையும் விற்பனை செய்துவிட்டால் இறுதியில் நாட்டு மக்கள் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள். அவ்வாறான ஒரு நாள் வரை காத்திருக்காமல் அரசாங்கத்தை எதிர்த்து மக்கள் வீதியிலிறங்க வேண்டும். இல்லாவிடின் அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் எம்மையும் விலைபேசி விற்றுவிடுவார்கள்.
இந்த நாட்களில் வீதியோரங்களில் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டிருப்பதை காண முடிகின்றது. அதனில் உண்ணத்தான் வந்தோம், உண்டு முடித்த பின்பே திரும்புவோம் என்று எழுதப்பட்டுள்ளது.
அவை வெறும் சொற்களாக மாத்திரம் எனக்கு தெரியவில்லை. மாறாக நல்லாட்சி அரசாங்கத்தினால் தற்போது அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் நாடகமாகவே எமக்கு தெரிகிறது என்றார்.
Post a Comment