Ads (728x90)

ஆஸ்திரேலிய அணியுடனான முதல் ஒருநாள் போட்டியில், இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதிப்படி) அபாரமாக வென்றது.
சென்னையில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா முதலில் பேட் செய்தது. தொடக்க வீரர்களாக ரகானே, ரோகித் களமிறங்கினர். ரகானே 5 ரன் எடுத்து கோல்டர் நைல் வேகத்தில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் வசம் பிடிபட்டார். கேப்டன் கோஹ்லி 4 பந்துகளை மட்டுமே சந்தித்த நிலையில், மேக்ஸ்வெல்லின் அற்புதமான கேட்சில் டக் அவுட்டாகி வெளியேறினார். அடுத்து வந்த மணிஷ் பாண்டேவும் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்ப, இந்தியா 11 ரன்னுக்கு அடுத்தடுத்து 3 விக்கெட் இழந்து தடுமாறியது.

இந்த நிலையில், ரோகித் - கேதார் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்தது. ரோகித் 28 ரன், கேதார் 40 ரன் (54 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். இந்தியா 21.3 ஓவரில் 87 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து திணற, இக்கட்டான கட்டத்தில் ஹர்திக் - டோனி ஜோடி 6வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ரன் சேர்த்தது. டோனி நிதானமாக கம்பெனி கொடுக்க, ஹர்திக் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். ஸ்டேடியத்தின் கூரையைத் தொடும் அளவுக்கு இமாலய சிக்சர்களைப் பறக்கவிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஹர்திக், 83 ரன் (66 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஸம்பா சுழலில் பாக்னர் வசம் பிடிபட்டார்.

நிதானமாக விளையாடிய டோனி 75 பந்தில் ஒரே ஒரு பவுண்டரியுடன் தனது 66வது அரை சதத்தை எட்டினார். பின்னர் டாப் கியருக்கு மாறிய அவர், புவனேஷ்வருடன் இணைந்து ஆஸி. பந்துவீச்சை பதம் பார்த்தார். இருவரும் 7வது விக்கெட்டுக்கு 72 ரன் சேர்த்தனர். டோனி 79 ரன் விளாசி (88 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) பாக்னர் வேகத்தில் வார்னரிடம் பிடிபட்டார். இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் குவித்தது. கடைசி 20 ஓவரில் மட்டும் 160 ரன் சேர்ந்தது. புவனேஷ்வர் 32 ரன் (30 பந்து, 5 பவுண்டரி), குல்தீப் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, ஆஸி. 50 ஓவரில் 282 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்னிங்சை தொடங்கவிருந்த நிலையில், கனமழை கொட்டியதால் ஆட்டம் தடைபட்டது.

பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில், ஆஸி. அணி 21 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது. அந்த அணி 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து தோல்வியை தழுவியது. மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 39 ரன் (18 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். பாக்னர் 32 ரன், வார்னர் 25 ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் சஹால் 3, ஹர்திக், குல்தீப் யாதவ்  தலா 2, புவனேஸ்வர் குமார், பும்புரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஹர்திக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி கொல்கத்தாவில் 21ம் தேதி நடைபெற உள்ளது.


ஹாட்ரிக் சிக்சர்...

இக்கட்டான கட்டத்தில் களமிறங்கினாலும், ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி இந்திய அணி சவாலான ஸ்கோரை எட்ட உதவினார். ஆடம் ஸம்பா வீசிய 37வது ஓவரின் முதல் பந்தில் டோனி 1 ரன் எடுக்க, 2வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் அடுத்த 3 பந்துகளையும் சிக்சருக்கு தூக்கி அசத்தினார். அந்த ஓவரில் மட்டும் இந்தியாவுக்கு 24 ரன் கிடைத்தது. இந்த ஆண்டு விளையாடிய சர்வதேச போட்டிகளில் அவர் 4வது முறையாக ஹாட்ரிக் சிக்சர் அடித்துள்ளார்.

டபுள் டக்...

இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் விராத் கோஹ்லி, மணிஷ் பாண்டே இருவரும் நேற்று டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஒருநாள் போட்டிகளில், ஒரே இன்னிங்சில் இந்திய அணியின் 3வது மற்றும் 4வது பேட்ஸ்மேன் அடுத்தடுத்து டக் அவுட் ஆவது இது 4வது முறையாகும். இந்த ஆண்டில் கோஹ்லி விளையாடியுள்ள 19 ஒருநாள் போட்டிகளில் 2வது முறையாக டக் அவுட்டாகி உள்ளார். 2015 மற்றும் 2016ல் மொத்தம் 30 இன்னிங்ஸ் விளையாடிய அவர், அதில் ஒரு முறை கூட ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

67வது பந்தில் முதல் பவுண்டரி...

டோனி நேற்று களமிறங்கியபோது இந்தியா 16 ஓவரில் 64 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்ததால், அவர் பொறுப்புடன் நிதானமாக விளையாடி ரன் சேர்த்தார். தான் சந்தித்த 67வது பந்தில் தான் முதல் பவுண்டரியையே அடித்தார். பிறகு அதிரடியாக விளையாடிய டோனி 88 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர் உட்பட 79 ரன் விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார். அவர் ஒருநாள் போட்டிகளில் தனது 66வது அரை சதத்தை நேற்று பதிவு செய்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget