மெக்சிகோவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்தில் சிக்கி 21 பள்ளி குழந்தைகள் உட்பட 248 பேர் பலியாகினர். மெக்சிகோ நாட்டின் தென் மாநிலங்களான ஒசாசா, சியாபாசில் 12 நாட்களுக்கு முன் பூகம்பம் ஏற்பட்டது. இதில், 100 பேர் பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்த சோகம் மறைவதற்குள், மெக்சிகோவில் நேற்று முன்தினம் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம் தாக்கியது.இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவானது. மக்கள் தொகை மிகுந்த மெக்சிகோ சிட்டி மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் பூகம்பத்தின் பாதிப்பு காணப்பட்டது. பல இடங்களில் வீடுகள், கட்டிடங்கள், பள்ளிக்கூடங்கள், கடைகள் என ஏராளமான கட்டிடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடக்கிறது.
மெக்சிகோ சிட்டியில் உள்ள ரெப்சமென் தொடக்க பள்ளியின் 3 மாடி கட்டிடம் பூகம்பத்தால் தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் சிக்கியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள், போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 21 சிறுவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 11 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 40 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மீட்பு குழுவினர் ஒரு மாணவர், ஆசிரியரை உயிருடன் கண்டறிந்தனர். இரவு நேரமானதால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. இடிபாடுகளில் சிக்கிய குழந்தை ஒன்றுக்கு குழாய் மூலமாக வீரர்கள் ஆக்சிஜன் கொடுத்தனர். கட்டிட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 248 பேர் இறந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
மோர்லாஸ் மாநிலத்தில் 64 பேர், மெக்சிகோ சிட்டியில் 36 பேர். பியூப்லாவில் 29 பேர், மெக்சிகோவில் 9 பேர், கர்ரிரோ மாநிலத்தில் ஒருவர் பூகம்பத்துக்கு பலியாகியுள்ளனர். இடிந்து விழுந்த வீடுகளையும், கட்டிட இடுபாடுகளில் சிக்கிய உறவினர்களையும் மக்கள் பீதியுடன் அழுதபடி பல மணி நேரமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம், செல்போன் சேவை உள்ளிட்டவை தடைப்பட்டுள்ளது. மெக்சிகோ சிட்டியில் உள்ள சர்வதேச விமான நிலையம் 3 மணி நேரம் மூடப்பட்டது. இதேபோல், பங்கு சந்தையும் மூடப்பட்டது. மக்கள் வீடுகளுக்கு செல்ல பயந்து, சாலைகளிலும் பூங்காக்களிலும் இரவு நேரத்தை கழித்தனர்.
டிரம்ப் ஆறுதல்: நாங்கள் இருக்கிறோம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், ' மெக்சிகோ சிட்டி மக்களை கடவுள் ஆசிர்வதிக்க வேண்டும். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். உங்களுக்காக அங்கே இருப்போம்' என பதிவிட்டுள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின், ' மெக்சிகோ சிட்டி பேரழிவை சந்தித்துள்ளது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் எனது நினைவுகள் இருக்கும். தனது நண்பர்களுக்கு உதவுவதற்கு கனடா தயாராக உள்ளது' என தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
32 ஆண்டுகளுக்கு பின்அதே நாளில் பூகம்பம்
மெக்சிகோவில் கடந்த 1985ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். தற்போது, 32 ஆண்டுகளுக்கு பிறகு அதே நாளில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டு மெக்சிகோ பாதித்துள்ளது.
Post a Comment