‘‘இந்தியாவும், சீனாவும், வெவ்வேறான வளர்ச்சி பாதையை தேர்ந்தெடுத்தாலும், இரு நாடுகளும் உலகை மாற்றியமைக்கும்’’ என பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் தெரிவித்தார். அமெரிக்காவில் இரண்டு வார சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், நியூ ஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசியதாவது:உலகிலேயே மக்கள் தொகை அதிகம் உள்ள சீனா மற்றும் இந்தியா இடையேயான உறவில் ஒத்துழைப்பும், போட்டியும் ஒரு அங்கமாக உள்ளது. இரண்டு பெரிய நாடுகளும் வேளாண் நாடுகள் என்பதில் இருந்து நகர்ப்புற நவீன மாதிரி நாடுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன.
இந்த இரு நாடுகளும் உலகை மாற்றியமைக்கவுள்ளன.ஆனால் உண்மை என்னவென்றால் சீனா பயங்கரமான சக்தியுடன் சென்று கொண்டிருக்கிறது. நாங்கள் அந்த அளவுக்கு செயல்பட வேண்டும்.இந்தியா-அமெரிக்கா உறவை பொறுத்தவரை, இரு நாடுகள் இடையே வேலை வாய்ப்பை உருவாக்குவதிலும், கல்வித் துறையிலும் நல்ல ஒத்துழைப்பு உள்ளது. இந்த உறவை இந்தியா நன்கு பராமரித்து வருகிறது. சீனா மற்றும் ரஷ்யாவுடனும் இந்தியா உறவு வைத்துள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, அமெரிக்காவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது.இவ்வாறு ராகுல் பேசினார்.
அமெரிக்க சுற்றுப் பயணத்தில் ராகுல் பல தரப்பினரை சந்தித்து பேசினார். அப்போது, அவர் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்து அடிக்கடி பேசினார். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் இது குறித்து பேசிய ராகுல், ‘‘வேலை வாய்ப்பு என்பது அதிகாரமளித்தலின் மிக முக்கியமான அம்சம். நாட்டின் வளர்ச்சியில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
போதிய வேலை வாய்ப்பை உருவாக்க முடியாததால்தான் இந்தியாவில் கடந்த 2014ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றது. பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் போன்றோர் ஆட்சிக்கு வரவும் இந்த வேலைவாய்ப்பு பிரச்னைதான் காரணமாக இருந்தது என நான் நினைக்கிறேன்’’ என்றார்
Post a Comment