யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்க இணைச் செயலாளர் எஸ்.கலாராஜுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. யாழ்.பல்கலைக்கழக வளாகத்திலேயே நேற்றையதினம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
யாழ்.பல்கலைக்கழகப் பெண் ஊழியர் ஒருவருடன் இரு நிர்வாக அதிகாரிகள் தகாத முறையில் செயற்பட்டுள்ளமை குறித்து குறித்த நிர்வாக அதிகாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் நேற்று மூன்றாவது நாளாகவும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்றையதினம் தமது போராட்டம் தொடர்பான நியாயப்பாடுகளை பல்கலைக்கழகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தெளிவுபடுத்தி வந்தநிலையில் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எஸ்.கலாராஜ் குறித்த சம்பவம் தொடர்பிலும், தமது போராட்டத்தின் நியாயப்பாடுகள் தொடர்பில் ஊடகவியலாளருக்கு தெளிவுபடுத்திய வேளையில் அங்கு நின்றிருந்த கட்சியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமொன்றின் தலைவர், இணைச் செயலாளரை நோக்கி “கண்ணீர் அஞ்சலிப் பிரசுரம் அடிக்க வேண்டி வரும்” என கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தனக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் உறுதி செய்துள்ளார்.
மேலும் இவ்வாறான அச்சுறுத்தல்களுக்குத் தான் அஞ்சப் போதில்லை என்றும் தொடர்ச்சியாக பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வரும் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment