வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கடந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன் போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான குற்றப் புலனாய்வுப் பிரிவு சிறப்பு விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ள நிலையில் அந்த விசாரணை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சம்பவம் தொடர்பில் அப்போதைய பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக் ஷ, அப்போதைய இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய, அப்போதைய மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க மற்றும் உளவுத் துறை தொடர்பிலான முன்னாள் பிரதானி கபில ஹெந்தவித்தாரன உள்ளிட்டோரிடம் விஷேட விசாரணைகளை முன்னெடுக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் பலரிடமும் பொலிஸ் அதிகாரிகள் பலரிடமும் ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆரம்பக்கட்ட விசாரணையில் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே கோத்தபாய உள்ளிட்டோரை விசாரணை செய்ய தீர்மனித்துள்ளனர். இந் நிலையில் கோத்தபாய உள்ளிட்டோர் எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்கான அறிவித்தல்கள் அவர்களுக்கு மிக விரைவில் அனுப்பப்படவுள்ளதாகவும் பொலிஸ் தலைமையக தகவல்கள் சுட்டிக்காட்டின.
கடந்த 2012 ஆம் ஆண்டு இரவு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் கலவரம் ஒன்று ஏற்பட்டது. இதனை பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தலையீடு செய்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் போது, இரவோடிரவாக இராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படைப்பிரிவு சிறைச்சாலைக்குள் நுழைந்து சிறையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதன் போது 27 கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் விளக்கமறியலில் இருந்த கோட்டே ரஜமஹா விஹாரையில் இருந்த 6 ஆம் புவனேகபாகுவின் (சபுமல் குமாரயா) அரச வாளினை திருடச் சென்று அங்கிருந்த தேரர்கள் இருவரை கொலைச் செய்த சந்தேக நபர்களும் அடங்குவர். இந்த வெலிக்கடை கலவரம் குறித்த சம்பவத்தின் சந்தேக நபர்கள் உண்மையை வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டதாக சந்தேகம் தெரிவிக்கப்படும் நிலையிலேயே தற்போது சி.ஐ.டி. அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
அண்மையில் இந்த வெலிக்கடை சிறைச்சாலை கலவரத்தின் பிரதான சாட்சியாளராக கருதப்படும் சுரேஷ் நந்திமாலின் மொரட்டுவை வீட்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அவர் சேவையாற்றும் ரயில்வே திணை
க்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் ஊடாக விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பிலும் அவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவு வெலிக்கடை சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
Post a Comment