வடகொரியா மீது கடும் பொருளாதார தடைகளை விதிக்கும் அமெரிக்காவின் தீர்மானம் திருத்தங்களுடன் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா சமீபத்தில் ஹைட்ரஜன் குண்டு சோதனை நடத்தி அண்டை நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் வடகொரியா மீது கடுமையான தடைகளை கொண்டு வந்து நெருக்கடி கொடுப்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்தது.இதன் ஒரு பகுதியாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஒரு வரைவு தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது. இந்த தீர்மானத்தில், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு சொந்தமாக உலகின் பல இடங்களில் உள்ள சொத்துக்களை முடக்குவது மற்றும் அந்நாட்டில் இருந்து பெட்ரோலியம் உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது உள்ளிட்டவை இடம்பெற்றிருந்தன. ஆனால் இவற்றை ரஷ்யா மற்றும் சீனா ஏற்க மறுத்ததாக தெரிகிறது.
இதனையடுத்து தீர்மானத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ரஷ்யா, சீனா ஆதரவுடன் ஒருமனதாக பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவிற்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியதாவது:
அணு ஆயுத வடகொரியாவை உலக நாடுகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.
வடகொரியா தனது அணு ஆயுத திட்டங்களை நிறுத்தாவிடில், அதனை நிறுத்த நடவடிக்கை எடுப்போம். சரியானதை செய்ய வேண்டும் என ஊக்குவிக்க முயற்சிக்கிறோம். தவறான செயலை செய்வதற்கான திறனை கொண்டிருப்பதால் அதனை தடுப்பதற்காக நாம் செயல்படுகிறோம் என்றார்.
தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையின் மூலம் வடகொரியாவிற்கு வழங்கப்படும் எண்ணெய் 30 சதவீதம் குறையும். மேலும் எரிவாயு, டீசல் மற்றும் கன எரிபொருள் சப்ளை 55 சதவீதம் குறைக்கப்படும்.
Post a Comment