Ads (728x90)

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 6வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா - டோனி ஜோடியின் அபாரமான ஆட்டமே எங்கள் தோல்விக்கு முக்கிய காரணம்’ என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் பகல்/இரவு ஆட்டமாக நடந்தது. டாசில் வென்று பேட் செய்த இந்தியா, 21.3 ஓவரில் வெறும் 87 ரன் மட்டுமே சேர்ந்து 5 முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கேப்டன் கோஹ்லி, மணிஷ் பாண்டே டக் அவுட்டாகினர். மிகவும் நெருக்கடியான கட்டத்தில் ஹர்திக் பாண்டியா - டோனி பொறுப்புடன் விளையாடி 6வது விக்கெட்டுக்கு 118 ரன் சேர்த்தது. ஹர்திக் 83 ரன், டோனி 79 ரன் விளாசியதால் இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 281 ரன் என்ற சவாலான ஸ்கோரை எட்டியது. மழை காரணமாக ஆட்டம் பாதிக்கப்பட்டதால், டக்வொர்த்/ லூயிஸ் விதிப்படி ஆஸ்திரேலியா 21 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

குல்தீப், சாஹல், ஹர்திக் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய ஆஸ்திரேலியா 21 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன் மட்டுமே எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. வார்னர் 25, மேக்ஸ்வெல் 39, பாக்னர் 32* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டாதது குறிப்பிடத்தக்கது.  இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் கூறியதாவது: தொடக்கத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசினோம். முன்னணி வீரர்களை விரைவாக ஆட்டமிழக்கச் செய்தும், அதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம்.

 ஹர்திக் பாண்டியா - டோனி இணைந்து அபாரமாக விளையாடியதே எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. அதே போல, சேசிங்கிலும் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது நெருக்கடியை அதிகரித்தது. மொத்தத்தில் இந்திய அணி வீரர்கள் எங்களை விட சிறப்பாக விளையாடினார்கள். அதே சமயம், வேகப் பந்துவீச்சாளர்கள் கோல்டர் நைல், கம்மின்ஸ் பந்துவீச்சு அபாரமாக இருந்தது நம்பிக்கை அளிக்கிறது. அடுத்து வரும் போட்டிகளில் கவனமாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம்.

Post a Comment

Recent News

Recent Posts Widget