இலங்கை மீது சர்வதேசத்தின் அழுத்தம் வலு வடைந்துகொண்டு வருகிறது. அதன் பின்னணியில் புலம்பெயர் அமைப்புகள் செயற்பட்டு இலங்கை இராணுவத்திற்கு எதிரான பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் அல் ஹுசைனின் அழுத்தத்திற்கிணங்கவே எதிர்வரும் 21ஆம் திகதி, வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலார் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜெயசூரியவிற்கு எதிராக பிரேசில் நாட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழங்கினை அரச சார்பற்ற நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ளன. மேலும் அவ்வாறான வழக்கை தாக்கல் செய்வதற்கு இலத்தின் அமெரிக்க நாடுகளான ஆஜன்டினா,கொலம்பியா,பேரு ஆகியனவும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இவ்வாறான நிலையில் வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலத்தை எதிர்வரும் 21 ஆம் திகதி விவாதத்திற்கு எடுப்பதாக பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலம் ஜூலை மாதம் 5ஆம் திகதி விவாதத்திற்கு எடுப்பதற்கு இருந்தது. எனினும் அப்போது நாட்டில் எழுந்த எதிர்ப்பினால் அது பிற்போடப்பட்டிருந்தது. இருந்தேபாதிலும் அதனை எதிர்வரும் 21 ஆம் திகதி விவாத்திற்கு எடுத்து குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றி சர்வதேச சமவாயத்தை இலங்கையில் அமுல்படுத்தவதற்கு எதிர்பார்க்கபட்டுள்ளது.
சர்வதேச சமவாயம் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட எந்த நாடுகளிலும் அமுலில் இல்லை. மேலும் குறித்த சமவாயத்தை இலங்கையில் அமுல்படுத்தும் வேலைத்திட்டம் தற்போதே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலக சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதுவும் மிகவும் பயங்கரமான சட்டமாகும்.
எனவே பிரேசிலில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் பயன்படுத்த ஏற்புடைய சாட்சிகளை தயார் பண்ணும் விடயங்கள் 21 ஆம் திகதி விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள சட்டமூலத்தில் உள்ளக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலம் சர்வதேச அழுத்தத்தின் பேரிலேயே எதிர்வரும் 21ஆம் திகதி பாராளுமன்றில் விவாதத்திற்கு எடுக்கப்படவுள்ளது.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 36 ஆவது அமர்வில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கையை இலக்குவைத்து அறிக்கை வெளியிட்டார். அதில் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான சட்டமூலம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியிருந்தார். மேலும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பிலான காரியாலயத்தை நடைமுறைப்படுத்துமாறும் இலங்கைக்கு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதனை அடிப்படையாக் கொண்டே எதிர்வரும் 21 ஆம் திகதி வலுக்கட்டாயமாக காணாமல்லாக்கப்படுவதிலிருந்து பாதுகாத்தல் பற்றிய சர்வதேச சமவாய சட்டமூலம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் கடந்த காலங்களில் சர்வதேச நீதிபதிகள் இலங்கைக்கு வருவது தொடர்பிலான உரையாடல் நிலவியது. எனினும் 21 ஆம் திகதி பாராளுமன்றில் விவாத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள சட்டமூலத்தின் எட்டாம் உறுப்புரையில் குறித்த குற்றச்சாட்டை முன்வைக்கும் அரசாங்கம் அல்லது அவ்வரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் நாடுகளுக்கு குற்றம் சாட்டப்படும் நபர்களை விசாரணைக்கு அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment