ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் நோக்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நியூ யோர்க் செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசைன் மற்றும் உலக நாடுகளின் அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல் கனடாவின் பிரதமர் டுருடூ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் பக்க சந்திப்புக்களாகவே அரசியல் தலைவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்புக்கள் நடைபெறுவுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.
அதாவது இலங்கை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் மிகவும் தாமதமாக செயற்படுகின்றதாக நேற்று முன்தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் கடும் அதிருப்தியை வெ ளியிட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை விசேட அம்சமாகும்.
இதன்போது பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க விடயத்தில் அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்து அல் ஹுசேனுக்கு ஜனாதிபதி மைத்திரி விளக்கமளிக்கவுள்ளார். அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கான அலுவலகம் நியமிக்கப்படவுள்ளமை குறித்தும் புதிய அரசியலமைப்பை உருவாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றமை தொடர்பாகவும் ஜனாதிபதி விளக்கிக்கூறவுள்ளார்.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜெனிவா பிரேரணையை அமுல்படுத்துவதில் அரசாங்கம் தாமதமாக செயற்படுவதாக இந்த சந்திப்பின்போது செய்ட் அல் ஹுசேன் அதிருப்தியை வெ ளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் பொறுப்புக்கூறல் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் 2015 ஆம் ஆண்டு பிரேரணையை அமுலாக்குதல் தொடர்பில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் இனவாத சக்திகளின் இடையூறுகள் தொடர்பாகவும் ஜனாதிபதி இதன்போது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேனுக்கு எடுத்துரைப்பார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வளாகத்தில் இந்த பிரத்தியேக சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதன்போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை மேலும் கட்டியெழுப்புதல் குறித்தும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வது தொடர்பாகவும் இரண்டு நாடுகளினதும் தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
மேலும் இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பு அதில் தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்பன தொடர்பாகவும் விரிவாக பேசப்படவுள்ளது. மேலும் எட்கா உடன்படிக்கை விவகாரம் மத்தள விமான நிலைய அபிவிருத்தி இணக்கப்பாடுகள் குறித்தும் இதன்போது இரண்டு நாடுகளினதும் தலைவர்களினால் கலந்துரையாடப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்கவுள்ள இரண்டு தலைவர்களினதும் சந்திப்பு மிகவும் முக்கியத்துவமிக்கதாக பார்க்கப்படுகின்றது.
இது இவ்வாறு இருக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் சீன ஜனாதிபதி ஜின்பின் மற்றும் ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே ஆகியோரையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவு மற்றும் ஏனைய தொடர்புகள் குறித்தும் பேசப்படவுள்ளது. துறைமுக நகர் அபிவிருத்தி திட்டம் மற்றும் சீனாவினால் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபி்விருத்தி திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்தும் இலங்கை சீன தலைவர்கள் கலந்துரையாடவுள்ளனர்.
அண்மையில் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஜப்பான் நாட்டின் பிரதமருடன் திருமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது குறித்து ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான வர்த்தக பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
ஐக்கிய நாடுகள் செயலாளர் அன்டோனியோ கட்ரஸுடனும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பயணிப்பது குறித்து ஆராயவுள்ளார். அத்துடன் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை முன்னெடுக்கும் அபிவிருத்தி உதவி திட்டங்கள் தொடர்பாகவும் பேசப்படவுள்ளது.
இதேவேளை ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளார்.
இந்த உரையின்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகள், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் வேலைத்திட்டங்கள் போன்றவை தொடர்பாக உலகநாடுகளின் தலைவர்களுக்கு விளக்கமளிக்கவிருக்கிறார்.
ஜனாதிபதியுடன் வெ ளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரும் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கலந்துகொள்ள நியுயோர்க் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment