சீனாவைச் சேர்ந்த 48 வயது யு ஜியான்ஸியாவின் இமை முடிகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு மிக நீளமானவை! சாதாரணமாக மனிதர்களின் இமை முடிகள் 0.8 முதல் 1.2 செ.மீ. வரை நீளம் இருக்கும். ஆனால் ஜியான்ஸியாவின் இமை முடிகள் 12.4 செ.மீ. நீளம் இருக்கின்றன! ‘உலகின் மிக நீளமான இமை முடிகள்’ என்ற கின்னஸ் சாதனையைப் பெற்றுவிட்டன. 2018-ம் ஆண்டு கின்னஸ் புத்தகத்தில் ஜியான்ஸியாவின் பெயர் இடம்பெற இருக்கிறது.
உலகம் முழுவதும் 500 பேர் இந்தப் பிரிவில் போட்டியிட்டனர். அதில் ஒருவர் கூட இவருக்கு அருகில் வர முடியவில்லை. “என்னுடைய இமை முடிகள் கின்னஸ் அமைப்பினரால் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அளவு எடுக்கப்பட்டன. ஓராண்டில் இன்னும் சற்று அதிகமாக முடிகள் வளர்ந்துவிட்டன. எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு நீளமாக இமை முடிகள் வளர்கின்றன என்று ஆச்சரியமாக இருக்கிறது.
நான் கோடிக்கணக்கில் பணம் புரளும் மிகப் பெரிய நிறுவனத்தில் சேர்மேனாக பதவி வகித்துவந்தேன். 2013-ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். இயற்கை மீது தீராத ஆர்வம் எனக்கு உண்டு. அதனால் மிகப் பெரிய தோட்டத்தை உருவாக்கினேன். அதில் 1,600 வகை ரோஜா செடிகளை வளர்த்துவந்தேன். அப்போதுதான் என் இமை முடிகள் மிக நீளமாக வளர ஆரம்பித்தன. அதற்கு முன்பு வரை நான் சாதாரணமாகத்தான் இருந்தேன்.
தோட்டத்துக்கும் என் இமை முடிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்று கூட யோசித்திருக்கிறேன். நீளமாக வளர ஆரம்பித்தவுடன் அதை வெட்டாமல் விட்டுவிட்டேன். என் வாய் வரை வளர்ந்துவிட்டன. எல்லோரும் இது எனக்குக் கஷ்டமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். நான் ஒருநாளும் எந்தவித அசவுகரியத்தையும் உணர்ந்ததில்லை. உலகிலேயே நீளமான இமை முடிகளுக்குச் சொந்தக்காரி என்பதில் எனக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது.
தவறுதலாக முடிக்கு எந்தவித ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். நீளமான இமை முடிகள் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் குறிப்பதாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு தடவை முகத்தைச் சுத்தம் செய்யும்போதும் கவனமாக இருக்கிறேன்” என்கிறார் யு ஜியான்ஸியா.
பிரான்ஸைச் சேர்ந்த ஹெர்மஸ் ஆடம்பரப் பொருட்கள் விற்பனை நிறுவனம், 55 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பேப்பர் வெயிட் கல்லை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தக் கல் பிரத்யேகமானது. இதைப்போல் இன்னொரு கல்லை இந்த உலகத்திலேயே பார்க்க முடியாது என்பதாலும் இது பணக்காரர்களுக்கானது என்பதாலும் இவ்வளவு விலை வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். வெள்ளை நிறத்தில் நீள்கோள வடிவில் இருக்கும் இந்தக் கல்லைச் சுற்றி தோல் கைப்பிடி பொருத்தப்பட்டிருக்கிறது. கல்லைத் தொடாமல் பயன்படுத்திக்கொள்ளலாம்.
என்னதான் சொன்னாலும் ஒரு பேப்பர் வெயிட்டுக்கு இவ்வளவு விலையா?
Post a Comment