Ads (728x90)

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 5-0 என ஒயிட்வாஷ் சாதனை படைத்துள்ள நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெற்றியை தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கேப்டன் கோஹ்லி, ரோகித், ரகானே, டோனி, மணிஷ், ஹர்திக் என இந்திய அணியின் பேட்டிங் வரிசை வலுவாக அமைந்துள்ளது.

அக்சர் பட்டேல் காயமடைந்துள்ளதால் அவருக்கு பதிலாக 3 போட்டிகளுக்கான அணியில் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர், ஷமி, உமேஷ் வேகமும், ஜடேஜா, குல்தீப், சாஹல் சுழலும் ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆஸி. அணியின் பந்துவீச்சு சற்று பலவீனமாக இருந்தாலும், அந்த அணியில் வார்னர், ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ், பாக்னர் ஆகியோர் அதிரடியில் அசத்தக் கூடியவர்கள் என்பதால், போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆஸி. வீரர்களில் பலரும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவம் உள்ளவர்கள் என்பதால், அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது.

மேலும், ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், இந்தியா 3வது இடத்திலும் உள்ள நிலையில், இந்த தொடரின் முடிவைப் பொறுத்து முதலிடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளதால் இரு அணிகளுமே புதிய உத்வேகத்துடன் களமிறங்குகின்றன. சென்னையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டி நடைபெற உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மழை குறுக்கிடாமல் இருந்தால், சுவாரசியமான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


அணிகள்

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, அஜிங்க்யா ரகானே, கே.எல்.ராகுல், மணிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ஹர்திக் பாண்டியா, எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, உமேஷ் யாதவ், முகமது ஷமி, யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜடேஜா.

ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஹில்டன் கார்ட்ரைட், டிராவிஸ் ஹெட், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் பாக்னர், நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் ஏகார், ஆடம் ஸம்பா, பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஆரோன் பிஞ்ச்.

ஆஸி. ஆதிக்கம்...

* இந்தியா - ஆஸ்திரேலியா இடையே 2013ல் இருந்து நடந்துள்ள ஒருநாள் போட்டிகளில், முதல் இன்னிங்ஸ் சராசரி 321 ரன்னாக அமைந்துள்ளது.

* இதே காலகட்டத்தில் இந்திய அணி தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 13 போட்டிகளில் 1104 ரன் (சராசரி 110.4; ஸ்டிரைக் ரேட் 102.88) விளாசியுள்ளார்.

* கடந்த ஓராண்டில் விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி எடுத்த ஸ்கோரில் முதல் 3 பேட்ஸ்மேன்களின் சராசரி பங்களிப்பு 57.6 சதவீதம். ஆஸி. டாப் 3ன் பங்களிப்பு 54.5% ஆகும்.

* இந்தியா கடைசியாக விளையாடிய 5 ஒருநாள் போட்டிகளிலும் வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 3 தோல்வி, 2 வெற்றி பெற்றுள்ளது.

* இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 போட்டிகளில் ஆஸி. 4-1 என முன்னிலை வகிக்கிறது.

* சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 30 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் போட்டியில் மோதுகின்றன. 1987ல் நடந்த உலக கோப்பை போட்டியில் ஆஸி. அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்றுள்ளது.

* நேருக்கு நேர் மோதியுள்ள 123 போட்டிகளில் ஆஸ்திரேலியா 72, இந்தியா 41 வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டியில் முடிவு இல்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget