இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் 3வது ஒருநாள் போட்டி, இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது.இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
சென்னையில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 26 ரன் வித்தியாசத்தில் (டி/எல் விதி) வென்ற நிலையில், அடுத்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 2வது போட்டியிலும் எளிதாக வெற்றியை வசப்படுத்தி அசத்தியது. பேட்டிங்கில் கேப்டன் விராத் கோஹ்லி 92 ரன், தொடக்க வீரர் ரகானே 55 ரன் விளாசிய நிலையில், மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கடைசி 15 ஓவரில் 67 ரன் மட்டுமே கிடைக்க, ஆஸ்திரேலியாவுக்கு 253 ரன் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தொடக்கத்தில் 9 ரன்னுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாறிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் ஸ்மித் (59 ரன்), ஹெட் (39 ரன்) ஆட்டம் சற்று நம்பிக்கை அளித்தது. ஹர்திக், சாஹல், குல்தீப் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்ததில் அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் ஆஸ்திரேலிய அணி சரணடைந்தது. குறிப்பாக, குல்தீப் யாதவ் தொடர்ச்சியாக 3 பந்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தது ஆஸி.யை நிலைகுலைய வைத்துவிட்டது. அந்த அணி 43.1 ஓவரிலேயே 202 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது. கடுமையாகப் போராடிய ஸ்டாய்னிஸ் 62 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்தியா 2-0 என முன்னிலை வகிக்க, 3வது போட்டி இன்று நடக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் மட்டுமல்லாது பந்துவீச்சும் மிக வலுவாக உள்ளதால், ஆஸி. அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குல்தீப் - சாஹல் சுழல் கூட்டணியை சமாளிப்பதே ஆஸி. பேட்ஸ்மேன்களுக்கு இமாலய சவாலாக அமைந்துள்ளது. சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டித் தொடரில் 5-0 என வாஷ்அவுட் சாதனை படைத்த கோஹ்லி & கோ, ஆஸி.க்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்ற வரிந்துகட்டுகிறது.
ஐசிசி தரவரிசைப் பட்டியலில் ஆஸி.யை பின்னுக்குத் தள்ளி 2வது இடம் பிடித்ததும் இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், தொடரை வெல்லும் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள கட்டாய வெற்றியை எதிர்நோக்கி உள்ள ஆஸி. அணியும் கடுமையாகப் போராடும் உறுதியுடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.
Post a Comment