இங்குள்ள சிலர் பத்திரிகைகளில் தமது பெயர்கள் வரவேண்டும் என்பதற்காக ஒன்றுமே தெரியாமல் எமக்கு அ,ஆ, படிப்பிப்பதுபோல கருத்துக்களைக் கூறிவருகின்றனர். இளையோர் சிலரும் இவ்வாறு நடந்துகொள்கின்றனர்.இதுதான் எமது அரசியலில் உள்ள பிரச்சினை. நாம் கூட்டாட்சியைக் கைவிட்டு விட்டோம், வடக்கு– – கிழக்கு இணைப்பை கைவிட்டுவிட்டோம், தலைமையைத் தூக்கி எறிய வேண்டும் என்றும் ஒன்றுமே விளங்காமல் சிலர் கொக்கரிக்கின்றனர்” இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சோனாதிராசா சீற்றத்துடன் தெரிவித்தார்.
கோப்பாய் கோமான் வன்னியசிங்கத்தின் 57ஆவது நினைவுப் பேருரை கோப்பாய் வடக்கு சித்திரவேலாயுதர் கோவில் மண்டபத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இளையோருக்கு சில விளக்கங்களை நாம் வழங்க வேண்டிய தேவை உள்ளது. அரசியல் என்பது எமது மண்ணில் எவ்வாறு அர்ப்பணிப்புடன் பயணிக்கின்றது என்பதற்கு தமிழ் அரசுக் கட்சி சிறந்த உதாரணமாக இருக்கும்.
எமது மக்களின் விடுதலைக்காகவே கட்சி ஆரம்பகாலத்திலிருந்து பயணித்துக்கொண்டிருக்கின்றது. அதில் வன்னியசிங்கம் முக்கிய பங்கு வகிக்கின்றார். தந்தை செல்வா நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றபோதிலும் வன்னியசிங்கம் கோப்பாய் தொகுதியில் வெற்றி பெற்றிருந்தார்.
முன்னைய காலத்தில் தமிழ் அரசுக் கட்சியின் கூட்டங்களில் சிலர் விசமத்தனமான குழப்பங்களை செய்ய முயற்சித்த துண்டு. அந்தச் செயற்பாடுகள் இப்போதும் அதிகமாகக் காணப்படுகின்றன. அது ஒரு பிரச்சினையல்ல.
இலங்கையில் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்ட போது கொழும்பில் நாடாளுமன்ற வளாகத்துக்கு முன்பாகவும் காலி முகத்திடலிலும் குருதி சிந்திப் போராட்டம் செய்தவர்கள் தமிழ் அரசுக் கட்சிக்காரர்கள் என்பதை மக்கள் அறிவார்கள்.
மிகக்குறைந்த எண்ணிக்கையைக் கொண்ட ஒரே தேசிய இனம் ஈழத்தமிழர்கள்தான். அவர்களில் ஏராளமானோர் சுய நிர்ணய உரிமையுடன் வாழ வேண்டும் என்பதற்காக அகிம்சைப் போராட்டங்களையும் ஆயுதப் போராட்டங்களையும் நடத்தி தமது இன்னுயிர்களைத் தியாகம் செய்துள்ளனர்.
வன்னியசிங்கம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது குருதி சிந்திய நிலையில் தனது உள்ளாடையுடன் நாடாளுமன்றில் உரையாற்றினார். காலி முகத்திடலில் அவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் எமது உச்சப் பலம் விடுதலைப்புலி கள் ஆயுதம் ஏந்திப்போராடிய காலத்திலேயே இருந்தது. அதனை யாராலும் மறுக்க முடியாது. நாம் அதில் நேரடியாகப் பங்கு பற்றாவிட்டாலும் நாம் அவர்களுடன் புரிந்துணர்வுடன் பயணித்தோம்.
தற்போது நாம் பன்னாட்டின் உதவியுடன் பயணித்து வருகின்றோம். தமிழர்களுக்கான சுய உரிமை விடயத்தில் இந்த அரசும் ஏமாற்றும் வகையில் செயற்பட்டால் வடக்கு – கிழக்கு ரீதியாக இந்த நாட்டில் கூட்டு அரசு மட்டுமல்ல எந்த ஆட்சியும் நடைபெறாத நிலமை ஏற்படும். அந்தவேளையில் ஐ.நாவும் வெளிநாடுகளும் எமக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளோம்.
தமிழர்களுக்குக் கிடைத்துள்ள அரசியல் சந்தர்ப்பத்தை மூழ்கடிக்க சிலர் முயற்சித்து வருகின்றனர். எமது கட்சியின் கொள்கை மற்றும் கடந்த மாகாண சபைத் தேர்தலின்போது முன்வைத்த அறிக்கையில் கூட்டாட்சி பற்றி பேசியுள்ளோம் என்று கூறி சிங்கள தீவிரவாதிகள் எம்மீது வழக்கு தாக்கல் செய்தனர். ஆனால் எமக்கு நீதிமன்றில் நீதி கிடைத்துவிட்டது.
தற்போதைய அரசமைப்பு உருவாக்கத்தில் தென்னிலங்கைத் தலைவர்கள் கூட்டாட்சியை ஏற்கமாட்டார்கள் என்று கூறிவரும் நிலையில் நாமும் ஒற்றையாட்சியை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் வைராக்கியமாக உள்ளோம். இந்த நாட்டில் உள்ள ஒன்பது முதலமைச்சர்களும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்பதில் திடமாக இருக்கின்றனர். ஆகவே நாம் பெறவிருக்கும் அதிகாரத்தைக் கொழும்பு அரசு மீளப்பெறமுடியாத வகையான ஏற்பாடுகள் உள்ளன.
சில சிங்கள தீவிரவாதிகள் கூட்டாட்சியைப் பிரிவினைவாதம் என்று கூறி வருகின்றனர். எதிர்வரும் 21 ஆம் திகதி புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கை வரும்போது சொல்லப்படும் வார்த்தையில் அனைவரும் அதனை விளங்கிக்கொள்வர். வடக்கு -– கிழக்கு இணைப்புத் தொடர்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒரு புரிந்து ணர்வுக்கு வந்துள்ளனர். முழுமையாக அதனை இணைக்க நாம் அனைத்து முயற்சி களை யும் எடுத்து வருகின்றோம்.
இந்த நாட்டில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும். பகிரப்பட்ட அதிகாரங்கள் கொழும்பு அரசால் மீளப்பெறமுடியாத ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதில் இந்த நாட்டின் அனைத்து தரப்புகளும் உறுதியாக உள்ளது.
வடக்கு – கிழக்கு இணைப்பு இடம்பெறவேண்டும் என்பதை, தமிழ் அரசுக் கட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பு எடுத்துக்காட்டுகின்றது – – என்றார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Post a Comment