நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நேற்று நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்ற சமநேரத்தில், தென்னிலங்கைக் காப்புறுதி நிறுவனத்தின் நிகழ்வும் நடைபெற்றது.திலீபனின் நினைவேந்த லைக் குழப்பும் வகையில் நடைபெற்ற அந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட்டும் பங்கேற்றிருந்தார்.
இந்தியாவுக்கு எதிராக அகிம்சை ரீதியில் போராடி வீரச்சாவடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆவது ஆண்டு நினைவுநாள் தமிழர் தாயக மண்ணில் நேற்று உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
நல்லூரில் திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்திலும் நினைவு நாள் நிகழ்வு நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வு நடைபெற்றபோது, நினைவுத் தூபிக்கு எதிராக உள்ள பிரதேசத்தில் தென்னிலங்கையைச் சேர்ந்த காப்புறுதி நிறுவனத்தின் நிகழ்வு இடம்பெற்றது. மிகப் பெரிய சத்ததுடன் அந்த நிகழ்வு நடைபெற்றது.
தியாக தீபத்தின் நினைவுநாள் உரை ஆரம்பித்தபோது, காப்புறுதி நிறுவனம் இலங்கையின் தேசிய கீதத்தைப் பெரும் சத்தத்துடன் ஒலிக்கவிட்டுள்ளது.
திலீபனின் நினைவு நாளைக் குழப்பும் வகையில் அந்த நிறுவனத்தின் செயற்பாடு அமைந்திருந்தாக, நினைவேந்தலில் கலந்து கொண்ட பலரும் சுட்டிக்காட்டினர்.
காப்புறுதி நிறுவனத்தின் நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் இ.ஆனோல்ட்டே கலந்து கொண்டிருந்தார்.
Post a Comment