
இந்நிலையில் இந்தத் தொடரானது இரட்டை சாதனையை படைக்க உள்ளது. போட்டிகளை நேரில் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் அதிக கோல்கள் அடிக்கப்பட்டுள்ள தொடர் என இரு சாதனைகளை எட்டிப்பிடிக்க உள்ளது. இந்தியாவில் நடைபெற்று வரும் யு 17 உலகக் கோப்பை தொடர். 6 நகரங்களில் நடத்தப்பட்டுள்ள போட்டிகளை இதுவரை 12, 24,027 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்துள்ளனர்.
சீனாவில் கடந்த 1985-ம் ஆண்டு நடைபெற்ற முதல் யு 17 உலகக் கோப்பைத் தொடரை 12,30,976 பேர் கண்டுகளித்ததே சாதனையாக இருந்து வருகிறது. இந்த சாதனையை தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் யு 17 உலகக் கோப்பை தொடர் முறியடிக்க உள்ளது. இன்னும் இரு ஆட்டங்கள் மீதம் உள்ளதால் இந்தத் தொடரை கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடும் என கருதப்படு கிறது.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டங்களை நேரில் கண்டு களித்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக பதிவாகி உள்ளது. இங்கு 4 ஆட்டங்களை 4,48,693 பேர் பார்வையிட்டுள்ளனர். இதன்படி சராசரியாக ஒரு ஆட்டத்தை 53,965 பேர் கண்டுகளித்துள்ளனர்.
கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் 66,600 பேர் அமர்ந்து போட்டியை ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் நடைபெற்று வரும் யு 17 உலகக் கோப்பைத் தொடரானது அதிக கோல்கள் அடிக்கப்பட்ட தொடர் என்ற சாதனையையும் படைக்க உள்ளது.
இதுவரை நடைபெற்றுள்ள 50 ஆட்டங்களில் 170 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் கடந்த 2013-ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிபா யு 17 உலகக் கோப்பைத் தொடரில் 172 கோல்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்து வருகிறது. இதனை முறியடிக்க இரு கோல்கள் மட்டுமே தேவையாக உள்ளது.
Post a Comment