
ஹசன் அலி, உஸ்மான் கான் ஆகியோர் மீண்டும் இலங்கையை தடுமாறச் செய்தனர். முதலில் பேட் செய்த இலங்கை 18.3 ஓவர்களில் 102 ரன்களுக்குச் சுருண்டது. ஹசன் அலி தனது சிறந்த டி20 பந்துவீச்சில் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், உஸ்மான் கான் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு 2 விக்கெட்.
ஹசன் அலி ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 ஒயிட்வாஷ் செய்ததில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். நேற்று 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இலங்கையின் 2-வது மோசமான டி20 ஸ்கோருக்குக் காரணமானார்.
இலங்கையின் சீகுகே பிரசன்னா (23), அறிமுக வீரர் சதீரா சமரவிக்ரமா (23) ஆகியோர் கொஞ்சம் தாக்குப் பிடித்தனர். ஆனால் பாகிஸ்தானின் பலதரப்பட்ட பந்து வீச்சாளர்களிடம் தாக்குப் பிடிக்க முடியாமல் கடைசி 8 விக்கெட்டுகளை 51 ரன்களுக்கு இழந்தது இலங்கை.
இலக்கைத் துரத்திய பாகிஸ்தான் அணியில் ஃபகார் ஜமான் (6), பாபர் ஆஸம் (1), அகமது ஷேசாத் (22) ஆகியோர் ஆட்டமிழந்தனர். ஆனால் ஷோயப் மாலிக் (42 நாட் அவுட்), மொகமது ஹபீஸ் (25 நாட் அவுட்) ஆகியோர் 16 பந்துகள் மீதமிருக்கையில் வென்றனர்.
ஷோயப் மாலிக் 31 பந்துகளில் எடுத்த 42 ரன்களில் 4 பவுண்டரிகளை அடித்தார். ஹபீஸ் 23 பந்துகளில் 25 ரன்களை 3 பவுண்டரிகளுடன் அடித்தார். 4-வது விக்கெட்டுக்காக இருவரும் 39 ரன்களைச் சேர்த்தனர்.
2-வது ஆட்டம் அபுதாபியில் வெள்ளியன்றும் லாகூரில் ஞாயிறன்று 3-வது டி20 போட்டியும் நடைபெறுகிறது.
Post a Comment