Ads (728x90)

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

புளூம்ஃபோண்டெய்ன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 195 ரன்கள் குவித்தது. குயிண்டன் டி காக் 44 பந்துகளில், ஒரு சிக்ஸர் 5 பவுண்டரிகளுடன் 59 ரன்களும், டி வில்லியர்ஸ் 27 பந்துகளில், 8 பவுண்டரிகளுடன் 49 ரன்களும் விளாசினர். ஹசிம் ஆம்லா 3, டுமினி 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். டேவிட் மில்லர் 26, பெஹார்தின் 36 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 62 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி தரப்பில் மெகதி ஹசன் 2 விக்கெட்கள் வீழ்த்தினார்.

196 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணிக்கு இம்ருல் கெய்ஸ், சவுமியா சர்க்கார் ஜோடி அதிரடி தொடக்கம் கொடுத்தது. 3.4 ஓவர்களில் 43 ரன்கள் சேர்க்கப்பட்ட நிலையில் இம்ருல் கெய்ஸ் 10 ரன்களிலும் அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 9 ஓவர்களில் வங்கதேச அணி 92 ரன்கள் சேர்த்து வலுவான நிலையில் இருந்தது. ஆனால் 10-வது ஓவரை வீசிய பெலுக்வயோ, சவுமியா சர்க்காரை அவுட்டாக்கினார். 31 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 47 ரன்கள் சேர்த்த சவுமியா சர்க்காரின் விக்கெட் திருப்பு முனையாக அமைந்தது.

இதன் பின்னர் களமிறங்கிய முஸ்பிகுர் ரகிம் 13, மஹ்முதுல்லா 3, சபிர் ரஹ்மான் 19, மெகதி ஹசன் 14, தஸ்கின் அமகது 0, சைபுல் இஸ்லாம் 1 ரன்களில் வெளியேற 20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. முகமது சைபுதின் 39 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பெலுக்வயோ 2 விக்கெட்கள் வீழ்த்தினார். 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி இரு ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஆட்டம் நாளை நடைபெறுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget