கலிஃபோர்னியாவில் ஆறு நாட்களாக கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீயில் சிக்கி 40 பேர் இறந்துள்ளனர், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போய் உள்ளனர். இந்த காட்டுத் தீ, கிராமப்புற பகுதிகளை தீக்கிரையாக்கியதில், ஆயிரக்கணக்கான வீடுகள் அழிந்துள்ளன.இதுகுறித்து கருத்து தெரிவித்த கலிஃபோர்னியா மாகாண ஆளுநர், இந்த மாகாணம் இதுவரை சந்தித்திராத மோசமான பேரழிவு என்று வர்ணித்தார்.
இன்னும் 16 இடங்களில் எரிந்துக் கொண்டிருக்கும் தீயை அணைக்கும் பணியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.
மணிக்கு 70 கி.மீ வேகத்தில் காற்று வீசுவதால், இன்னும் பல பேரை அந்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
மோசமான பாதிப்புக்கு உள்ளான சொனொமா ஒயின் பகுதியில் இருக்கும் சாண்டா ரோசாவில் மட்டும், கடந்த சனிக்கிழமை மூன்றாயிரம் பேர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியை பார்வையிட்ட கலிஃப்போர்னியா மாகாணா ஆளுநர் ஜெர்ரி பிரவுன், "இது நம்பமுடியாத பேரழிவு. இது யாரும் கற்பனை செய்யாத திகிலூட்டும் நிகழ்வு" என்று கூறினார்.
அந்த மாகாண வரலாற்றில், இதுதான் மோசமான உயிரைக் கொல்லுகிற காட்டுத்தீ. இந்த காட்டுத்தீயினால் மட்டும் ஏறத்தாழ 100,000 பேர் வேறு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பல பகுதிகள் வெறும் சாம்பலாக மாறியுள்ளன.
தீப்பற்றிய இந்த பகுதியிலிருந்து 50 மைல் தொலைவில் இருக்கும், சான் ஃப்ரான்ஸிக்கோவும் புகை சூழ்ந்து, நகரம் முழுவதும் சாம்பல் படிந்துள்ளது.
நாபா பள்ளதாக்கில் இருக்கும், 13 ஒயின் தொழிற்சாலைகள் இந்த காட்டுத்தீயினால் எரிந்துள்ளன.
பிபிசியிடம் பேசிய, சாண்டா ரோஸாவில் இருக்கும் ஒரு ஒயின் தொழிற்சாலை உரிமையாளர், இந்த காட்டுத்தீயினால் பல மில்லியன் மதிப்புள்ள ஒயின் அழிந்துவிட்டன என்றார்.
Post a Comment