Ads (728x90)

தொழில்நுட்ப புரட்சி மூலம் புதிய இந்தியா உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதி கூறினார்.

சட்டப்பேரவை தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றுள்ளார். இந்நிலையில் காந்திநகர் ஐஐடிக்கான புதிய கட்டிடத்தை நேற்று மாலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

புதிய இந்தியாவுக்காக நாட்டை ஒருங்கிணைப்பதற்கு தொழில்நுட்ப புரட்சி மிகவும் அவசியம். தொழில்நுட்ப புரட்சி மூலம் புதிய இந்தியா உருவாக்கப்படும். புதிய இந்தியாவை உருவாக்க டிஜிட்டல் கல்வி அவசியம்.

டிஜிட்டல் கல்வியை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் அனைத்து வயதினருக்கும் கொண்டு செல்வதற்கான பணி நடந்து வருகிறது. பயன்படுத்துவோருக்கு ஏற்ற வகையில் எளிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தினால் டிஜிட்டல் கல்வி வழியில் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியும். அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, மக்களுக்கு சிறந்த சேவை, சிறந்த நிர்வாகம் ஆகியவற்றுக்கு டிஜிட்டல் இந்தியா உத்தரவாதம் அளிக்கும்.

உலகின் முன்னணி 500 கல்வி நிறுவனங்களில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெறவில்லை. இந்தியக் கல்வி நிறுவனங்களை சர்வதேசத் தரத்துக்கு உயர்த்துவது அவசியம். எனவே ஐஐடிக்கள் மேம்பாட்டுக்காக ரூ. 1,000 கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் மாணவர்களின் அறிவு அடைப்படையில் இல்லாமல் மக்களின் தேவை அடிப்படையில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி, இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில், ஜிஎஸ்டி விதிகளில் முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. சிறு வணிகர்கள் மாதந்தோறும் வரி செலுத்துவதற்கு பதிலாக 3 மாதங்களுக்கு ஒருமுறை வரி செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 27 பொருட்களுக்கு வரியைக் குறைத்துள்ளது. வணிகர்களிடம் இருந்து வரப்பெற்ற புகார்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களைத் தொடர்ந்து இதுபோன்ற பல மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக நேற்று காலை துவாரகா நகரில் பிரதமர் மோடி பேசும்போது, “ஜிஎஸ்டி கவுன்சிலில் எடுக்கப்பட்ட முடிவுகள் காரணமாக மக்களுக்கு தீபாவளி பண்டிகை முன்கூட்டியே வந்துள்ளது. ஜிஎஸ்டியை அறிமுகம் செய்தபோது, அதில் உள்ள குறைகள் உட்பட அதன் அனைத்து அம்சங்களையும் ஆராய்வோம் என்று மத்திய அரசு உறுதி அளித்தது. அதன்படி ஜிஎஸ்டி விதிகளை எளிதாக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குடிமக்களின் நலனைப் பாதுகாக்கவும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை உறுதிப்படுத்தவும் அரசு தொடர் முயற்சி மேற்கொண்டுள்ளது” என்றார்.

துவாரகா நகரில் ரூ.962.43 கோடி செலவிலான கேபிள் பாலத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார். துவாரகா நகரில் புகழ்பெற்ற துவாரகாதீஷ் கோயில் இருக்கும் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில் 2.32 கி.மீ. நீளத்துக்கு 4 வழி கேபிள் பாலம் அமைக்கப்பட உள்ளது. தற்போது இக்கோயிலுக்கு பக்தர்கள் பகலில் மட்டும் படகு மூலம் சென்று வருகின்றனர். பாலம் கட்டப்பட்டால் பக்தர்கள் எந்நேரமும் செல்ல முடியும்.

விழாவில் பிரதமர் மேலும் பேசும்போது, “குஜராத்தில் சுற்றுலா வளர்ச்சிக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இங்கு பாஜக ஆட்சி நிலவியதால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது. பழைய மற்றும் புதிய துவாரகாவை இணைக்கும் இந்தப் பாலம், உள்ளூர் மக்களுக்கும் இங்கு வரும் பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

துவாரகா - போர்பந்தர் இடையிலான 94 கி.மீ. தேசிய நெடுஞ்சாலையை 4 வழிச் சாலையாக மாற்றும் திட்டத்துக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். முன்னதாக துவாரகாதீஷ் கோயிலுக்குச் சென்ற பிரதமர், அங்கு பகவான் கிருஷ்ணரை வழிபட்டார். பின்னர், ராஜ்கோட் சென்ற பிரதமர் அதன் அருகில் ஹிராசார் என்ற இடத்தில், விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget