ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். அதேவேளையில் தொடக்க வீரரான ரோஹித் சர்மா 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் ரோஹித் சர்மா ஒரு சதம், 2 அரை சதம் உட்பட 296 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்களில் முதலிடம் பிடித்தார். நாக்பூரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் அவர் 125 ரன்கள் விளாசி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இதனால் இந்திய அணி ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என கைப்பற்றி அணிகள் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்தது.வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ரோஹித் சர்மா, ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 4 இடங்கள் முன்னேற்றம் கண்டு 5-வது இடத்தை பிடித்துள்ளார். அவருடன் தொடக்க வீரராக களமிறங்கிய அஜிங்க்ய ரஹானேவும் 4 இடங்கள் முன்னேறி 24-வது இடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஆரான் பின்ச், டேவிட் வார்னர் ஆகியோரும் தரவரிசைப் பட்டியலில் முன்னேறி உள்ளனர். ஆரோன் பின்ச் 9 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தையும், டேவிட் வார்னர் 865 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும் பிடித்துள்ளனர். முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள விராட் கோலிக்கும், வார்னருக்கும் 12 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
மற்ற பேட்ஸ்மேன்களில் கேதார் ஜாதவ் 44-வது இடத்தில் இருந்து 36-வது இடத்துக்கும், ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் 74-வது இடத்தில் இருந்து 54-வது இடத்துக்கும் முன்னேறி உள்ளனர். பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில், காயம் காரணமாக இந்தியத் தொடரில் விளையாடாததால் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹசல்வுட் 18 புள்ளிகளை இழந்து முதலிடத்தை பறிகொடுத்துள்ளார்.
அதேவேளையில் தென் ஆப்பிரிக்காவின் இம்ரன் தகிர் 718 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். இருவருக்கும் இடையே 4 புள்ளிகள் இடைவெளி உள்ளது. இந்திய வீரர்களில் அக்சர் படேல் 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். இதேபோல் யுவேந்திரா சாஹல் 24 இடங்கள் முன்னேறி 75-வது இடத்தையும், குல்தீப் யாதவ் 9 இடங்கள் முன்னேறி 80-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் வங்கதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 5-வது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.
Post a Comment