பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதால், இன்று சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கைதாகி, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நடராஜனின் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் செயலிழந்து, கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நுரையீரலும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது நடராஜனுக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாக பெற்று அவருக்கு பொருத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இதுகுறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பரோலில் சென்று கணவரை சந்திக்க சசிகலா முடிவெடுத்துள்ளார். எனவே சசிகலாவின் வழக்கறிஞர்கள், பரோல் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை? சிறை விதிமுறைகளின்படி சசிகலாவுக்கு பரோலில் செல்ல தகுதி உள்ளதா? என சிறைத்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
முதல்கட்டமாக நடராஜனின் உடல்நிலை குறித்த மருத்துவ சான்றிதழ்களை சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர். இந்த ஆவணங்கள் சசிகலாவுக்கு பரோல் வழங்க போதுமானவை எனக்கூறியுள்ளதால், அவர் விரைவில் பரோலில் வெளியே வருவார். எனவே முறைப்படி செவ்வாய்க்கிழமை சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க இருக்கிறார் என பெங்களூரு அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சிறைத்துறை டிஜிபி என்,எஸ்.மேக்ரிக்கிடம் கேட்ட போது, ''சசிகலா தரப்பில் பரோல் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. சிறை விதிகளின்படி நியாயமான காரணங்களை தெரிவித்தால், பரோல் வழங்குவது குறித்து முடிவெடுப்போம். ஒன்று முதல் மூன்று நாட்கள் வரை கேட்டால் சிறைத்துறை அதிகாரிகளே முடிவெடுப்பார்கள். 15 நாட்கள் வரை பரோல் தேவைப்பட்டால், நீதிமன்றத்தையே அணுக வேண்டியதாக இருக்கும்''என்றார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சசிகலா பரோலில் வெளியே வரவிருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Post a Comment