Ads (728x90)

செவ்வாய் கிரகத்தில் எதிர்பாராதவிதமாக கடந்த மாதம் 11ம் தேதி பயங்கர சூரிய புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சூரிய ஒளிச்சுடர் 25 மடங்கு பிரகாசமாகவும், கதிர்வீச்சின் அளவு 2 மடங்கு அதிகரித்ததாகவும் நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் முன், அங்கு நிலவும் தட்ப வெப்பம், கதிர்வீச்சு ஆகியவற்றை துல்லியமாக அறியும் முயற்சியில் நாசா விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் கடந்த 2012ம் ஆண்டு தரையிறங்கிய ‘கியூரியாசிட்டி  ரோவர்’ ஆய்வுக் கலத்தில் கதிர்வீச்சின் அளவைக் கண்டறியும்(ஆர்ஏடி) கருவி  பொருத்தப்பட்டிருந்தது. அதன் மூலம் கதிர்வீச்சு கணக்கிடப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காக ‘மேவன்’ என்ற விண்கலத்தை, நாசா விஞ்ஞானிகள் அட்லஸ் 5 ராக்கெட் மூலம் கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அனுப்பினர். இது செவ்வாய் கிரகத்தில் வீசும் சூரியக் காற்றை கடந்த 2014ம் ஆண்டு முதல் ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் வீசும் சூரியக் ஒளிக்கற்றையின் பிரகாசம், கதிர்வீச்சு ஆகியவற்றின் அளவை இது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பி வருகிறது.

 கடந்த மாதம் 11ம் தேதி மேவன் விண்கலம் அனுப்பிய தகவல் நாசா விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்பாராதவிதமாக சூரிய ஒளிக்கற்றையின் அளவு 25 மடங்கு பிரகாசமாக இருந்துள்ளது. மேலும் கதிர்வீச்சின் அளவும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிகபட்ச ஒளிக்கற்றை மற்றும் கதிர்வீச்சு 2 நாட்கள் நீடித்துள்ளது.

இதுகுறித்து ‘மேவன் இமேஜிங் அல்ட்ராவைலட் ஸ்பெக்ட்ரோகிராப் இஸ்ட்ரூமென்ட் குழுவில் இடம் பெற்றுள்ள உறுப்பினரும், கொலரோடா பல்கலைக்கழகத்தின் விண் இயற்பியல் ஆய்வு மைய விஞ்ஞானி சோனல் ஜெயின் கூறுகையில், ‘‘செவ்வாய் கிரகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூரிய புயல் வழக்குத்துக்கு மாறானது’’ என குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய் கிரகத்தின் கதிர்வீச்சின் அளவை ஆய்வு செய்து வரும் அமெரிக்க விஞ்ஞானி டான் ஹேஸ்லர் கூறுகையில், ‘‘செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நாங்கள் இது வரை பார்த்த கதிர்வீச்சில், இது மிகப்பெரிய நிகழ்வு. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் சூரிய புயல் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற எங்களின் புரிதலை இந்த நிகழ்வு மேம்படுத்தும். செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும்போது, அவர்களை பாதுகாக்க, இதுபோன்ற தட்ப வெப்பத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்’’ என குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

Recent News

Recent Posts Widget