
42.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. தொடரை 4-1 என்று கைப்பற்றியதோடு தென் ஆப்பிரிக்காவுக்கு மேலே ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்தது.
ரோஹித் சர்மா (125) ஒருநாள் போட்டிகளில் 6,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரரானார். அஜிங்கிய ரஹானே (61) தொடர்ச்சியாக 4-வது அரைசதம் கண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் 60 ரன்களுக்கும் மேல் சராசரி கண்டு டிவில்லியர்ஸைக் கடந்துள்ளார் ரோஹித்.
ஜனவரி 2016-ல் ஆஸ்திரேலியாவில் 1-4 என்று இந்திய அணி தோல்வியடைந்த பிறகே ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தொடர் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தொடர்ச்சியாக 6 தொடர்களை வென்றுள்ளது..
இலக்கை விரட்ட தன்னம்பிக்கையுடன் இந்திய அணி களமிறங்கியது என்பதை விட எந்த ஓவரில் வெற்றி பெறும் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது. ஆஸ்திரேலிய பந்து வீச்சில் கூல்ட்டர் நைல், கமின்ஸ் நீங்கலாக எவரும் இந்தப் பிட்சுக்குத் தகுந்த படி வீசவில்லை. தார்ச்சாலை பிட்சில் பேட்டிங்கில் கோட்டை விட்ட ஆஸ்திரேலியா பந்து வீச்சிலும் கோட்டை விட ரோஹித், ரஹானே ஜோடி 22.3 ஓவர்களில் 124 ரன்கள் சேர்த்தனர். ரஹானேவுக்கு வேட் ஒரு கேட்சை விட்டார், ஆனால் உடனேயே கூல்ட்டர் நைல் பந்தில் ரஹானே எல்.பி.ஆகி வெளியேறினார்.
94 ரன்களில் இருந்த ரோஹித் சர்மா கூல்ட்டர் நைல் பந்தை புல்ஷாட்டில் சிக்ஸ் அடித்து தனது 14-வது ஒருநாள் சதத்தை நிறைவு செய்தார். மொத்தம் 109 பந்துகளில் 5 சிக்சர்கள் 11 பவுண்டரிகள் விளாசி 125 ரன்கள் எடுத்து ஸாம்ப்பாவிடம் ஆட்டமிழந்தார். 5 சிக்சர்களில் கூல்ட்டர் நைல் பந்தில் 2, டிராவிஸ் ஹெட் பந்தில் 2, ஸாம்ப்பா பந்தில் 1 சிக்சர் அடித்தார் ரோஹித்.
ஆனால் ரோஹித் சர்மா தொடக்கத்தில் டைமிங் கிடைக்காமல் திணறினார் முதல் ரன்னை எடுக்க 14 பந்துகள் எடுத்துக் கொண்டார். காரணம் டிரைவ் ஆடக்கூடிய லெந்தில் பந்துகள் விழவில்லை ரோஹித் சர்மாவினால் டைம் செய்ய முடியவில்லை. ஆனால் அவர் ரீச்சில் விழுந்த பந்து மிட் ஆஃபில் பவுண்டரியும் இன்னொன்று அதே திசையில் சிக்ஸ் ஆகவும் ஆனது. கூல்ட்டர் நைல், பேட் கமின்ஸ் அருமையாக வீச இவர்களுக்கு உறுதுணையாக வீச்சாளர்கள் இல்லை, மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட் இருந்திருந்தால் 243 ரன்கள் இலக்குக்கு இந்திய அணி கஷ்டப்பட்டிருக்கும் என்பதே உண்மை.
விராட் கோலி ஆட்டத்தில் சரளம் மிஸ்ஸிங், 55 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்தார், ஆட்டம் சுவாரசியமாக அமையவில்லை, கடைசியில் ஸாம்ப்பாவை சிக்ஸ் அடிக்கும் முயற்சியில் லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்தார். அந்தப்பக்கம் ஷார்ட் பவுண்டரியாக்க மறந்து விட்டார்கள் போலும்!
இந்திய ஸ்பின்னர்களிடம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் ஸ்வீப் ஷாட்டில் வீழ்ந்தனர், ஸ்பின்னர்களுக்கு எதிராக ஆடக்கூடிய ஒரே ஆக்ரோஷ ஷாட் ஸ்வீப் என்பதே அவர்களது கொள்கையாக இருக்கிறது. இது அபாயகரமான ஷாட், ஏனெனில் எல்.பி.வாய்ப்பு அதிகம். அதனால்தான் கவாஸ்கர் ஸ்வீப் ஆட மாட்டார், இப்பவும் தோனி ஸ்வீப் பெரும்பாலும் ஆடமாட்டார் என்பதை கவனித்திருக்கலாம். சச்சின் சில வேளைகளில் அதிகமாக ஆடுவார், ஆனால் அவரை யாருடனும் ஒப்பிட முடியாது, அவரது பயிற்சி அப்படிப்பட்டது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் டி20 அனுபவம் கைகொடுக்க கட்டர்கள், விரலில் பந்தை விடுவது, வேகம் குறைந்த பந்து, வேகமான பந்து, யார்க்கர் என்று பல்வேறு விதமாக வீசி ஆஸ்திரேலியாவை எழும்ப விடாமல் செய்தனர், ஆனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சில் இந்த வெரைட்டி இல்லை. கேதார் ஜாதவ்விடம் விக்கெட்டைக் கொடுக்கும் எந்த அணியும் வெற்றி பெற முடியாது. ஒருவேளை பாய்காட் வர்ணனையில் இருந்தால் ஜாதவ்வை ‘லாலிபாப்’ பவுலர் என்று அழைத்திருக்கக் கூடும்.
எப்படியோ, இந்திய ஆதிக்கம் தொடர்கிறது. 4-1 வெற்றியுடன் கோப்பையை வென்றது, ஆட்ட நாயகனாக ரோஹித் சர்மாவும், தொடர் நாயகனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
Post a Comment