Ads (728x90)

வட கொரியாவுடன் அந்நாட்டின் அணு ஆயுத திட்டம் குறித்து பேச்சு நடத்துவதன் மூலம் தனது நேரத்தை வீண் செய்வதாக அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸனிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வட கொரியாவுடன் அமெரிக்கா தொடர்பில் உள்ளதாக செய்திகள் வந்துள்ள நிலையில், அதிபர் டிரம்ப் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், ''உங்களின் சக்தியை சேமித்து வையுங்கள் , ரெக்ஸ். என்ன செய்ய வேண்டுமோ, அதை நாம் செய்வோம்'' என்று டிரம்ப் கூறியுள்ளார்.

வியாழக்கிழமையன்று வட கொரியாவுடன் அமெரிக்கா நேரடித் தொடர்பில் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுச் செயலர் ரெக்ஸ் டில்லர்ஸன் தெரிவித்தார்.

வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அண்மைய மாதங்களில், வட கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக, அமெரிக்காவை அச்சுறுத்துவதன்மூலம் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஒரு 'தற்கொலை முயற்சியில்' ஈடுபட்டுள்ளார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்ததற்கு, "வயது மூப்பால் மனத் தளர்ச்சியுற்றுள்ள டிரம்ப் ஆயுதங்களின் மூலமாக வழிக்குக் கொண்டுவரப்படுவார்," என்று கிம் ஜோங் கூறியிருந்தார்.

சமீப மாதங்களில், வட கொரியா தொடர்ந்து ஆயுத சோதனைகளில் ஈடுபட்டதால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தது.

நீண்ட தூரம் செல்லக்கூடிய ஏவுகணையில் பொருத்தும் அளவில் உள்ள, சிறிய ரக ஹைட்ரஜன் குண்டு ஒன்றை தாங்கள் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக கடந்த செப்டெம்பர் 3-ஆம் தேதி வட கொரியா கூறியிருந்தது.

சர்வேதச அளவில் அந்த ஆயுத சோதனைகள் கண்டிக்கப்பட்டதுடன், அவற்றை நிறுத்தகோரி வட கொரியா மீது ஐ.நா அவையால் பல தடைகளும் விதிக்கப்பட்டன.

வட கொரியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதில் அக்கறை காட்டிவரும் அதன் நெருங்கிய கூட்டாளியான சீனா, இந்த வாரம் தங்கள் நாட்டில் உள்ள வட கொரிய தொழில் நிறுவனங்கள் அனைத்துக்கும் தடை விதித்தது

Post a Comment

Recent News

Recent Posts Widget