Ads (728x90)

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 146 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 496 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரரான டீன் எல்கர் 199, மார்க்ராம் 97, ஹசிம் ஆம்லா 137 ரன்கள் விளாசினர். இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 89.1 ஓவரில் 320 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

அதிகபட்சமாக மோமினுல் ஹக் 77, மஹ்மதுல்லா 66, கேப்டன் முஸ்பிகுர் ரகிம் 44 ரன்கள் சேர்த்தனர். தென் ஆப்பிரிக்க அணித் தரப்பில் கேசவ் மகாராஜ் 3, மோர்னே மோர்கல், ரபாடா ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 176 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 56 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்திருந்த போது டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 81, டெம்பா பவுமா 71 ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணித் தரப்பில் மோமினுல் ஹக் 3 விக்கெட்கள் வீழ்த்தினார். 424 ரன்கள் இலக்குடன் பேட் செய்த வங்கதேச அணி 15.3 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 49 ரன்கள் சேர்த்திருந்த போது மழை காரணமாக 4-வது நாள் ஆட்டம் அத்துடன் முடித்துக் கொள்ளப்பட்டது. தமிம் இக்பால், மோமினுன் ஹக் ஆகியோர் ரன் ஏதும் எடுக்காத நிலையிலும், இம்ருல் கெய்ஸ் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

நேற்று கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய வங்கதேச அணி 32.4 ஓவர்களில் 90 ரன்களுக்கு சுருண்டது. முஸ்பிகுர் ரகிம் 16, மஹ்மதுல்லா 9, லிட்டன் தாஸ் 4, சபிர் ரஹ்மான் 4, தஸ்கின் அகமது 4, ஷபியூல் இஸ்லாம் 2, முஸ்டாபிஜூர் ரஹ்மான் 1 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அந்த அணி கடைசி 7 விக்கெட்களை 41 ரன்களுக்கு தாரை வார்த்தது. கடைசி நாள் ஆட்டம் தொடங்கிய ஒன்றரை மணி நேரத்துக்குள் வங்கதேச அணி தோல்வியை சந்தித்தது.

தென் ஆப்பிரிக்க அணித் தரப்பில் கேசவ் மகாராஜ் 4, ரபாடா 3, மோர்னே மோர்கல் 2 விக்கெட்கள் வீழ்த்தினர். 333 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்க அணி இரு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget