அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஐஎஸ் தீவிரவாதி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 58 பேர் உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.நெவடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் பொழுதுபோக்குக்கு பெயர் பெற்ற நகரம். இங்குதான் ஏராளமான சூதாட்ட விடுதிகள் உள்ளன. இந்த நகரம் இரவு முழுவதும் பரபரப்பாக காணப்படும். இந்த நகரில் ‘ரூட் 91 ஹார்வெஸ்ட்’ என்ற பெயரில் 3 நாள் நாட்டுப்புற இசை நிகழ்ச்சி செப்டம்பர் 29-ல் தொடங்கியது.
இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு (உள்ளூர் நேரப்படி), ‘மண்டாலே பே ரிசார்ட் அன்ட் கேசினோ’ என்ற ஓட்டலுக்கு எதிரே நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடகர் ஜேசன் அல்தீன் பாடிக் கொண்டிருந்தார். இதில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டது. பின்னர் அடுத்தடுத்து துப்பாக்கி குண்டுகள் மழை போல் வேகமாக பாய்ந்து வந்தன. இதனால் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அனைவரும் தரையில் படுத்துக் கொள்ளுங்கள் என்று சிலரும் ஓடுங்கள் என்று சிலரும் குரல் கொடுத்தனர். இதையடுத்து, பலர் தரையில் படுத்தனர். பலர் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிரடிப்படை போலீஸார் (ஸ்வாட் குழுவினர்) சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மண்டாலே பே ஓட்டலின் 32-வது மாடியிலிருந்த ஓர் அறையிலிருந்து அந்த மர்ம நபர் தானியங்கி துப்பாக்கியால் சுட்டதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அந்த நபரின் பெயர் ஸ்டீபன் படாக் (64) என்பதும் நெவடா மாகாணம் மெஸ்கொயட் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அந்த அறையிலிருந்து சுமார் 10 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. மேலும் அந்த நபருடன் வசித்து வந்த மரிலூ டான்லி என்ற பெண் தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
ஐஎஸ் பொறுப்பேற்பு
எனினும், இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் வெளியிட்ட அறிக்கையில், “லாஸ் வேகாஸ் தாக்குதல் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவரால் நிகழ்த்தப்பட்டது. அந்த நபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்துக்கு மாறியுள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் 2 போலீஸார் உட்பட 58 பேர் உயிரிழந்ததாகவும் காயமடைந்த 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை உயர் அதிகாரி ஷெரீப் ஜோசப் லொம்பார்டோ தெரிவித்தார். சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனினும் இந்நிகழ்ச்சியில் பாடிய இசைக் குழுவினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நெவடா ஆளுநர் பிரியன் சன்டோவல் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க வரலாற்றில் தனிமனிதரால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது. கடந்த ஆண்டு ஆர்லாண்டு இரவு விடுதியில் நடந்த தாக்குதலில் 49 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment