Ads (728x90)

ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி நேற்று பாகிஸ்தானை 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

ஆசிய கோப்பைக்கான ஹாக்கி போட்டி டாக்கா நகரில் நடந்து வருகிறது. இதில் ஏ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்த்து இந்திய அணி ஆடியது. ஆட்டத்தின் முதல் குவாட்டரில் இரு அணிகளும் அடுத்தடுத்து தாக்குதலில் ஈடுபட்டாலும் எந்த அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என்று சமநிலையில் இருந்தது. இந்நிலையில் 2-வது குவாட்டரில் இந்திய வீரர்கள் வேகமெடுத்தனர். அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் திணறினர்.

17-வது நிமிடத்தில் சிங்லென்சனா சிங் அடித்த கோலின் மூலம் இந்திய அணி முன்னிலை பெற்றது. இந்திய அணியின் முன்னிலையை குறைக்க பாகிஸ்தான் வீரர்கள் கடுமையாக முயன்றனர். ஆனால் இந்திய அணியின் தற்காப்பு வீரர்களும், கோல் கீப்பர் சூரஜ் கர்கேராவும், அந்த முயற்சிகளை தவிடுபொடியாக்கினர். 2 பெனாலிடி கார்னர் வாய்ப்புகள் மூலம் கோல் அடிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்தனர். இதனால் முதல் பாதி ஆட்டத்தின் இறுதியில் இந்தியா 1-0 என முன்னணியில் இருந்தது.

ஆட்டத்தின் 3-வது குவாட்டரில் இந்திய வீரர்கள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தினர். ரமன்தீப் சிங் 44-வது நிமிடத்திலும், ஹர்மன்பிரீத் சிங் 45-வது நிமிடத்திலும் கோல்களை அடிக்க இந்திய அணியின் முன்னிலை 3-0 என உயர்ந்தது. ஆட்டம் கைவிட்டுப் போன நிலையில் 48-வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் அலி ஷான் கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஏ பிரிவில் முதலிடத்தை பிடித்தது.

Post a Comment

Recent News

Recent Posts Widget