கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாம் உங்களுக்குத்தான் வாக்களித்தோம். சிறையில் உள்ள எமது பிள்ளைகள் உங்களுக்கு வாக்களிக்குமாறே எமக்கு கூறியிருந்தனர். அவ்வாறு உங்களை ஆதரித்த எமது பிள்ளைகளுக்கு நீங்கள் விடிவைத் தரவேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் தாய்மார் கண்ணீர் மல்க கோரியுள்ளனர்.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வடமாகாண சபை ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் ஏற்பாட்டில் அநுராதபுரம் சிறைச்சாலையில்
உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டுள்ள இரு அரசியல் கைதிகளின் தாய்மாரும்
மற்றொரு அரசியல் கைதியின் மனைவியும் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பில் மாகாணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் உட்பட பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி அரசியல் கைதிகளின் தாய்மார்கள், மற்றும் மனைவியிடம் கருத்துக்களை கேட்டறிந்திருந்தார். இதன்போது அரசியல் கைதிகளின் தாய்மார் கண்ணீர் மல்க தமது பிள்ளைகளை காப்பாற்றுமாறு ஜனாதிபதியிடம் மன்றாடினர். எமது பிள்ளைகள் பல வருடங்களாக சிறையில் வாடுகின்றனர்.
அவர்களது வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றத்திலிருந்து அநுராதபுரம் மேல்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. எனவே எமது மகன்மாரது கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றவேண்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலில் உங்களுக்கே நாம் வாக்களித்திருந்தோம். சிறையில் உள்ள எமது பிள்ளைகள் உங்களுக்கே வாக்களிக்குமாறு எம்மிடம் கூறியிருந்தனர். உங்களை ஆதரித்த எங்களுக்கு நீங்கள் விடிவைப் பெற்றுத்தரவேண்டும் என்று தாய்மார் ஜனாதிபதியிடம் கண்ணீர் விட்டு அழுது கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment