அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்ட காப்புறுதி திட்டத்தை அனைத்து மதங்களைச் சார்ந்த அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.கல்வி மற்றும் சுகாதாரத் துறையின் அபிவிருத்தியின் மூலமாக நல்லாட்சி அரசாங்கம் செயற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சுரக் ஷா இலவச காப்புறுதி வழங்கும் தேசிய நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் உரையாற்றுகையில்,
தேசிய அரசாங்கம் என்ற வகையில் நாம் நாட்டுக்கு வழங்கிய பிரதான வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றியுள்ளோம். அனைத்து அரசாங்கமும் நாட்டின் கல்வித் துறையின் வளர்ச்சிக்கு பெரும் முக்கியத்துவம் அளித்துள்ளன.
இதன்படியே தேசிய அரசாங்கம் என்ற வகையில் நாம் அதற்காக முக்கியத்துவம் செலுத்தி வருகின்றோம். இதன் பிரகாரமே காப்புறுதி திட்டத்தின் பிரகாரம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதி வழங்கியுள்ளோம். எனினும் குறித்த இலவச காப்புறுதியை அனைத்து மத அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கவும் அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
அரசாங்கம் என்ற வகையில் கல்வி துறையில் ஒரே கொள்கையையே கடைப்பிடிக்கின்றோம். இந்நிலையில் நாம் கல்வி துறையில் பாரிய மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது.
இலவசமாக காப்புறுதி வழங்கியமையின் ஊடாக நாம் விழுந்தாலும் பிரச்சினையில்லை. நினைத்த மாதிரி ஓடி திரியலாம் என தற்போது மாணவர்கள் நினைக்கக் கூடும். அப்படியல்ல ஏதாவது விபத்துகள் ஏற்பட்டால் மாத்திரமே இவ்வாறான சலுகைகள் வழங்கப்படும். விபத்துகளில் இருந்து மாணவர்களினால் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை குறைப்பதே எமது நோக்கமாகும்.
எனவே கல்வி மற்றும் சுகாதாரத் துறை சார்ந்த அபிவிருத்திக்கு நல்லாட்சி அரசாங் கம் என்ற வகையில் நாம் முக்கியத்துவம் வழங்குவோம்.
அத்துடன் இந்த காப்புறுதி வழங்குவது குறித்தான பாரிய பொறுப்பு ஆசிரியர் களிடமே உள்ளது. எனவே ஆசிரியர்கள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் ஆசிரியர்களின் கடமை உணர்வு என்றும் போற்றப்பட வேண்டும் என்றார்.
Post a Comment