Ads (728x90)

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி கோரும் வழக்கினை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், கோயில் நிர்வாகம் பெண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்க முடியுமா? இத்தகைய தடை அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையை மீறுவதாகுமா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 41 நாள் கடும் விரதம் இருந்து இருமுடி சுமந்துவரும் ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

பல நூறு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்குள் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சபரிமலை கோயிலுக்குள் 10 முதல் 50 வயதுவரை உள்ள பெண்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என கேள்வி எழுப்பியது. மேலும் இது பாலின சமத்துவத்துக்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து சபரிமலை தேவஸ்வம் போர்டு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், "10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் என்பதால் விரதத்தின் புனிதத்தை அந்த வயது பெண்களால் காக்க முடியாது. மேலும் சபரிமலை ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் உள்ளதாலும் அந்த வயது பெண்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.

அதே சமயம் சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதில் எந்த தயக்கமும் இல்லை என கேரள அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில், இவ்வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இவ்வழக்கை மற்றொரு பெரிய அமர்வுக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட வேண்டிய கேள்விகளைப் பட்டியலிட்டு அதனை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யும்படி இரு தரப்புக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (அக்.13 - 2017) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வு வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டது.

Post a Comment

Recent News

Recent Posts Widget