Ads (728x90)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான மொழி; இத்தனை ஆண்டுகளுக்கும் தொடர் இலக்கிய அர்ப்பணிப்புகளை வழங்கிய மொழி; முதல் இடை, கடை என காலத்திற்கேற்ப சங்கங்களை வைத்து வளர்ந்த மொழி; பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் மொழி, உலகம் முழுவதும் பல கோடி பேர் பேசும் மொழி; உலகில் இருக்கும் மிகச்சில செம்மொழிகளில் ஒரு செம்மொழி - இப்படி ஏராளமான அசைக்க முடியாத அம்சங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழுக்கு அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையில் தனி இருக்கை ஏற்படுத்த, பல தமிழர்கள் சேர்ந்து பாடுபடுகிறார்கள்.

ஏன் ஹார்வர்டு?:

உலக தர வரிசையில் முதல் இடத்திலும், 350 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமாக இருப்பது ஹார்வர்டு பல்கலை. இங்கு ஏற்கனவே சீனா, ஹூப்ரூ, பெர்சியா, கிரீக் போன்ற மொழிகள் பற்றி விரிவான ஆராய்ச்சிகள் செய்யப்படுகின்றன. ஆனால், உலக பழமையான, இன்னமும் வாழ்ந்துகொண்டு இருக்கும் தமிழ் பற்றி, போதிய அளவு ஆராய்ச்சிகள் செய்யப்படவில்லை.

ஹார்வர்டு பல்கலையில் தனி இருக்கை அமைந்தால், தமிழ் பற்றிய ஆராய்ச்சிகள் விரிவாக மேற்கொள்ளப்படும். ஹார்வர்டு பல்கலையில், தமிழுக்கு தனி இருக்கை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இதனால் தான் ஏற்படுகிறது.

இருக்கைக்கு என்ன செய்ய வேண்டும்?

திறமையான ஒரு பேராசிரியரை தேர்வு செய்து, இருக்கையை பல்கலை அமைக்கும். தகுதியும் திறமையும் உள்ள பேராசிரியர்களை நியமித்து, உலகிற்கு தமிழை கற்றுக்கொடுக்கும். தமிழ் மொழியின் அமைப்பு, இலக்கியம், பண்பாடு, கலாசாரம், மொழி பெயர்ப்பு, வாழ்வியல், தொல்லியல், வரலாறு ஆகியவை பற்றி ஏராளமான ஆராய்ச்சிகள் செய்யப்படும்.

ஆனால், இதற்கு தேவை ரூ.40 கோடி. இந்த தொகை நன்கொடையாகவே திரட்டப்பட வேண்டும். இவ்விருக்கைக்கு ரூ.10 கோடி நிதி தரப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே உலக தமிழர்களிடம் இருந்து நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த சீரிய முயற்சிக்காக http://www.harvardtamilchair.org  என்ற தனி இணையதளம் துவக்கப்பட்டுள்ளது. இருக்கைக்கு நன்கொடை தருவோர், இந்த இணையதளம் மூலம் நேரடியாக பல்கலைக்கழக கணக்கில் தொகையை செலுத்தலாம். நிதி தருவோரின் பெயர், தொகை போன்றவை இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

எப்படி செலுத்துவது?:

அமெரிக்கா தவிர, இந்தியா உள்பட மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆன்லைனில் தொகையை ‛பேபால்' ஆப்ஸ் மூலம் அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் தொகைக்கு இணையான அமெரிக்க டாலராக அது மாற்றிக்கொள்ளப்படும். கிரடிட் கார்டு மூலமும் அனுப்பலாம்.


 தமிழை மேலும் உயர்ந்த இடத்தில் வைப்போம்

Post a Comment

Recent News

Recent Posts Widget