இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் உடற் தகுதியை நிருபித்துள்ளார். இதன் மூலம் அவர், இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாடுவது உறுதியாகி உள்ளது.இலங்கை கிரிக்கெட் அணி இம்மாதத்தின் 2-வது வாரத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அந்த அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் விளையாடுவதை அந்த அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டரான ஏஞ்சலோ மேத்யூஸ் உறுதி செய்துள்ளார். 30 வயதான அவர், கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் காயம் காரணமாக விலகியிருந்தார்.
காலின் பின்புற பகுதியில் ஏற்பட்ட காயம் குணமடைந்துள்ளதை தொடர்ந்து தனது உடல் தகுதியை மேத்யூஸ் நிருபித்துள்ளார். அவருடன் குசால் பெரேரா, குணரத்னே ஆகியோரும் காயத்தில் இருந்து குணமாகி உள்ளனர். இதையடுத்து இவர்கள், இந்திய தொடருக்கான தேர்வின் போது பரிசீலிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாகி ஆஷ்லே டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை அணி, பாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி தொடரை வென்றது. ஆனால் அந்த அணிக்கு எதிரான 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஒயிட்வாஷ் ஆனது. குறுகிய வடிவிலான போட்டிகளில் இலங்கை அணி பங்கேற்ற கடைசி 16 ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் வரும் 16-ம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது
Post a Comment