இந்திய பாட்மிண்டன் நட்சத்திர வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த்தின் பெயர் பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த ஸ்ரீகாந்த், கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் தொடரின் இறுதி ஆட்டத்தில் 21-14, 21-13 என்ற நேர் செட்டில் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும், ஒரே ஆண்டில் 4-வது சூப்பர் சீரிஸ் பட்டம் வெல்லும் 4-வது வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ஸ்ரீகாந்த்.
கடந்த வாரம் டென்மார்க் ஓபனில் அவர் பட்டம் வென்றிருந்தார். அடுத்தடுத்து இரு பட்டங்கள் வென்றுள்ள அவர், உலகத் தரவரிசைப் பட்டியலில் தற்போது 4-வது இடத்தில் உள்ளார். கடந்த ஜனவரி மாதமும் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக இந்தோனேஷியா, ஆஸ்திரேலிய ஓபனில் பட்டம் வென்றிருந்தார். இந்நிலையில் அவரது பெயரை பத்மஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார் பாராளுமன்ற விவகார அமைச்சர் விஜய் கோயல்.
நாட்டின் 4-வது உயர்ந்த இந்த விருதுக்கு கிடாம்பி ஸ்ரீகாந்தின் பெயரை பரிந்துரை செய்து அமைச்சர் விஜய் கோயல், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளார். இந்த விருதுக்கு பரிதுரை செய்வதற்கான காலக்கெடு கடந்த செப்டம்பர் மாதம் 15-ம் தேதியுடன் நிறைவடைந்து விட்டது என்பதும் இம்முறை பத்ம விருது களுக்கு பி.வி.சிந்து, மகேந்திர சிங் தோனி ஆகியோரது பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரூ.2 கோடி பரிசு
இதற்கிடையே அமராவதியில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. குறிப்பாக சமீபத்தில் பிரெஞ்சு ஓபனில் பட்டம் வென்ற பாட்மிண்டன் வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்துக்கு ஆந்திர அரசு சார்பில் பரிசாக ரூ. 2 கோடி, உதவி ஆட்சியர் பதவி, 1,000 கஜத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஸ்ரீகாந்தின் பயிற்ச்சியாளர் கோபிசந்த் உட்பட மேலும் இரு பயிற்சியாளர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் பரிசு தொகை வழங்கவும் தீர்மானம் செய்யப்பட்டது.
Post a Comment