
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடருக்கு பிறகு இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி இன்று தேர்வு செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி, ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியும் இன்று தேர்வு செய்யப்பட உள்ளது.
இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டிகளில் விளையாடுவதில் இருந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கருதப்படுகிறது. அவர் ஆடாத பட்சத்தில் இந்திய டெஸ்ட் அணிக்கு அஜிங்க்ய ரஹானேவும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவும் தலைமை தங்குவார்கள் என்று கருதப்படுகிறது.
தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை 17 வீரர்களைக் கொண்ட அணியை தேர்ந்தெடுக்க தேர்வுக் குழு முடிவெடுத்துள்ளது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஆடுகளங்கள் இருக்கலாம் என்பதால் புவனேஷ்வர் குமார், முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ராவும் இந்த அணியில் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரை அஸ்வின், ஜடேஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும், குல்தீப் யாதவ், சாஹல் ஆகியோரில் யாராவது ஒருவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment